பேரிக்காய் மரங்களில் நோய் தாக்குதல்
கொடைக்கானலில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு பெய்த அதிக மழை, குறைந்த பனி உள்ளிட்ட பருவநிலை மாற்றத்தால் பேரிக்காய் மரங்களில் மர்ம நோய் தாக்கி விளைச்சல் பாதிக்கப்பட்டுள்ளது.
'மலைகளின் இளவரசி'யான கொடைக்கானலில் கால நிலைக்கு ஏற்ப காய்கறிகள் மற்றும் பழ வகைகள் விளைவிக்கப்படுகிறது. கொடைக்கானலில் விளையும் பழவகைகளில் பிளம்ஸ் மற்றும் பேரிக்காய் மிக முக்கியமானதாகும். கொடைக்கானலில் விளையும் பேரிக்காய் பல்வேறு மருத்துவ குணங்கள் உடையது. இந்த பேரிக்காய் சென்னை, பெங்களூரு, கோவை, திருச்சி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் உள்ள சந்தைக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது.
குறிப்பாக கேரள மாநிலத்திற்கு அதிக அளவில் ஏற்றுமதி செய்யப்பட்டு வருகிறது, தற்போது பேரிக்காய் சீசனையொட்டி, கொடைக்கானலில் அட்டுவம்பட்டி, வில்பட்டி, பள்ளங்கி, வடகவுஞ்சி, பெருமாள்மலை, உள்ளிட்ட பகுதிகளில் அறுவடை பணியில் விவசாயிகள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். மலைப்பகுதியில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு பெய்த அதிக மழை, குறைந்த பனி உள்ளிட்ட பருவநிலை மாற்றத்தால் பேரிக்காய் மரங்களில் மர்ம நோய் தாக்கி விளைச்சல் பாதிக்கப்பட்டுள்ளது.
இதனால் பச்சைப்பசேல் என்று இருக்கும் பேரிக்காய்கள் நிறம் மாறியது. கடந்த ஆண்டு ஒரு கிலோ பேரிக்காய் ரூ.50 முதல் ரூ.60 வரை விற்பனையானது. ஆனால் நிறம் மாறியதால், இந்த ஆண்டு விலை குறைந்து ஒரு கிலோ பேரிக்காய் ரூ.20 முதல் ரூ.30 வரை விற்பனையானது. இதனால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.