போலீஸ் ஏட்டு பணியிடை நீக்கம்
பணியிடை நீக்கம்
திருப்பத்தூர் மாவட்டத்தில் கள்ளத்தனமாக மணல் கடத்தும் நபர்கள் மீது கடுமையான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஆல்பர்ட் ஜான் கடந்த 3 நாட்களுக்கு முன்பு எச்சரித்து இருந்தார். அன்று இரவே ஆம்பூர் டவுன் போலீஸ் ஏட்டு சீனிவாசன் என்பவர், மணல் கடத்தலில் ஈடுபடும் சுரேந்தர் என்கிற எலி என்பவரிடம் பணம் கேட்டு பேசிய ஆடியோ சமூக வளைதலத்தில் பரவி பெரும் பரபரப்பை ஏற்படுத்திது.
போலீஸ் ஏட்டுவின் இந்த ஆடியோ மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மற்றும் போலீசாரிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அதைத்தொடர்ந்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஆல்பர்ட் ஜான், சம்மந்தப்பட்ட போலீஸ் ஏட்டு சீனிவாசனை பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டார். மேலும் அவர் மீது துறை ரீதியிலான நடவடிக்கைக்கும் பரிந்துரை செய்யப்பட்டது.
ஏட்டுவுடன் பேசிய நபர் கைது
பணியிடை நீக்கம் செய்யப்பட்ட போலீஸ் ஏட்டுவிடம் பேசும் நபர் சுரேந்தர் என்கிற எலி என்பவர் மீது ஏற்கனவே 11 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு இருந்தது. இதனால் அவரை கண்காணிக்க ஆம்பூர் டவுன் போலீசாருக்கு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு உத்தரவிட்டார். அதன் பேரில் சான்றோர்குப்பம் பாலாற்று பகுதியில் போலீசார் சோதனை நடத்திய போது சுரேந்தர் மணல் கடத்தலில் ஈடுபட்டது தெரியவந்தது. அதைத்தொடர்ந்து அவரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
இதுகுறித்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஆல்பர்ட் ஜான் கூறுகையில் விலைமதிப்பற்ற இயற்கை வளத்தை அழிக்கும் மணல் கடத்தல் குற்றவாளிகளுக்கு எதிராக மிக கடுமையான நடவடிக்கை தொடரும். மணல் கடத்தலில் ஈடுபடும் நபர்களிடம் தொடர்பில் இருக்கும் போலீசாரின் விவரங்கள் சேகரிக்கப்பட்டு வருகிறது. மணல் கடத்தலுக்கு துணை போகும் நபர்கள் யாராக இருந்தாலும் நடவடிக்கை எடுக்கப்படும். மணல் கடத்தலில் ஈடுபடுபவர்கள் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்படுவார்கள் என தெரிவித்தார்.