மலைகிராம அரசு உயர்நிலைப் பள்ளியில் 2 ஆசிரியர்கள் பணியிடை நீக்கம்


மலைகிராம அரசு உயர்நிலைப் பள்ளியில் 2 ஆசிரியர்கள் பணியிடை நீக்கம்
x

ஆம்பூர் அருகே மலைகிராம அரசு உயர்நிலைப் பள்ளியில் 2 ஆசிரியர்கள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர்.

திருப்பத்தூர்

திருப்பத்தூர் மாவட்டம் மாதனூர் ஒன்றியம் நாயக்கனேரி மலை கிராமத்தில் அரசு உயர்நிலைப் பள்ளி அமைந்துள்ளது. இந்த பள்ளியில் பணிபுரியும் ஆசிரியர்கள் சிலர் சரிவர பள்ளிக்கு செல்வதில்லை என்றும், முன் அறிவிப்பு இன்றி விடுப்பு எடுப்பது, கற்பித்தலில் குறைபாடு என பல்வேறு குற்றச்சாட்டுகள் திருப்பத்தூர் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் மதன்குமாருக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதன் அடிப்படையில் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் மதன்குமார் நாயக்கனேரி மலை கிராமத்தில் உள்ள அரசு உயர்நிலைப் பள்ளிக்கு கடந்த 2 நாட்களுக்கு முன்ப ஆய்வுக்காக சென்றுள்ளார். அங்கு மாணவர்களிடம் இரு நாட்கள் தொடர்ச்சியாக ஆய்வு நடத்தி கற்றல் குறைபாடு உள்பட பல்வேறு குறைபாடுகள் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

அதே நேரத்தில் ஆசிரியர்கள் எந்தவித முன் அறிவிப்பும் இல்லாமல் தொடர்ச்சியாக விடுமுறை எடுத்திருப்பதும் தெரியவந்துள்ளது. அது மாணவர்களின் மூலம் உறுதிபடுத்தப்பட்டுள்ளது. அதோடு இதுகுறித்து ஊர் பொதுமக்களிடமும் தகவல் சேகரிக்கப்பட்டு உறுதிபடுத்தப்பட்டுள்ளது.

அதன் அடிப்படையில் புகாருக்கு உள்ளான பட்டதாரி ஆசிரியர் ரஜினிகாந்த், தமிழாசிரியர் உதயகுமார் ஆகிய இருவரையும் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் மதன்குமார் பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டுள்ளார்.

கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு திருப்பத்தூர் பகுதியில் 2 ஆசிரியர்கள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ள நிலையில் தற்போது ஆம்பூர் பகுதியில் இரண்டு ஆசிரியர்கள் தற்காலிக பணி நீக்கம் செய்யப்பட்டுள்ள சம்பவம் ஆசிரியர்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


Next Story