பணம் வசூலிக்கும் தொழிலாளர்கள் பணி நீக்கம்
பழனி முருகன் கோவிலில் முடிக்காணிக்கை செலுத்த பக்தர்களிடம், பணம் வசூலிக்கும் தொழிலாளர்கள் பணிநீக்கம் செய்யப்படுவார்கள் என இணை ஆணையர் மாரிமுத்து எச்சரிக்கை விடுத்துள்ளார்.
முடிக்காணிக்கை
அறுபடை வீடுகளில் 3-ம் படைவீடான பழனி முருகன் கோவிலுக்கு தமிழகம் மட்டுமின்றி வெளிமாநிலம், வெளிநாடுகளில் இருந்து தினமும் பக்தர்கள் வருகை தருகின்றனர்.
இவர்கள் முருகப்பெருமானை சாமி தரிசனம் செய்வதோடு அலகு குத்துதல், முடிக்காணிக்கை செலுத்துதல் உள்ளிட்ட பல்வேறு நேர்த்திக்கடன்களை நிறைவேற்றுகின்றனர். அந்தவகையில் திருப்பதிக்கு அடுத்தபடியாக பழனியில் ஏராளமான பக்தர்கள் முடிக்காணிக்கை செலுத்துகின்றனர்.
பக்தர்கள் முடிக்காணிக்கை செலுத்த வசதியாக அடிவாரம் கிரிவீதிகள், திருஆவினன்குடி, சண்முகநதி ஆகிய இடங்களில் முடிக்காணிக்கை நிலையங்கள் உள்ளன.
வீடியோ வைரல்
இந்நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள கோவில்களில் பக்தர்கள் கட்டணமின்றி முடிக்காணிக்கை செலுத்தலாம் என அறிவிக்கப்பட்டது. இதுபற்றி அங்கு அறிவிப்பு பலகையும் வைக்கப்பட்டது.
ஆனால் பழனி கோவிலில் முடிக்காணிக்கை செலுத்த வரும் பக்தர்களிடம் அங்குள்ள தொழிலாளர்கள் பணம் வசூலிப்பதாக பரவலாக புகார் வந்தது. மேலும் இதுதொடர்பாக பக்தர்கள் சமூக வலைத்தளத்தில் பதிவிட்ட வீடியோவும் வைரலானது.
இணை ஆணையர் எச்சரிக்கை
இந்நிலையில் பழனி முருகன் கோவில் இணை ஆணையராக புதிதாக பொறுப்பேற்றுள்ள மாரிமுத்து நேற்று திருஆவினன்குடி கோவில், சரவணப்பொய்கை மற்றும் அங்குள்ள முடிக்காணிக்கை நிலையத்துக்கு சென்று ஆய்வு செய்தார். அப்போது அங்கு பக்தர்களுக்கு செய்யப்பட்டுள்ள வசதிகள் குறித்து பார்வையிட்டனர்.
பின்னர் அவர் நிருபர்களிடம் கூறுகையில், பழனி முருகன் கோவிலில் முடிக்காணிக்கை செலுத்த வரும் பக்தர்களிடம் பணம் வசூலிப்பது கண்டுபிடிக்கப்பட்டால் சம்பந்தப்பட்ட தொழிலாளர் பணிநீக்கம் செய்யப்படுவார்கள். இதேபோல் பக்தர்களிடம் தரக்குறைவாக பேசும் கோவில் பணியாளர்கள் மீதும் கடும் நடவடிக்கை எடுக்கப்படும். ஆன்லைன் மூலம் டிக்கெட் பெறுவதில் குறைபாடு இருப்பின், அது கண்டறியப்பட்டு உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.