நடிகர் விஷாலுக்கு எதிரான கோர்ட்டு அவமதிப்பு வழக்கு தள்ளுபடி -ஐகோர்ட்டு உத்தரவு
நடிகர் விஷாலுக்கு எதிரான கோர்ட்டு அவமதிப்பு வழக்கை தள்ளுபடி செய்தும், வருகிற 26-ந்தேதி பிரதான வழக்கில் குற்றச்சாட்டு பதிவு செய்யப்படும் என்றும் சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
சென்னை,
நடிகர் விஷால் தனது விஷால் பிலிம் பேக்டரி சார்பில் படத்தயாரிப்பு பணிகளுக்காக சினிமா பைனான்சியர் அன்புச்செழியனிடம் இருந்து ரூ.21.29 கோடியை கடனாக பெற்றிருந்தார். இந்த கடனை லைகா நிறுவனம் திருப்பிக் கொடுத்தது. அதற்கு பதில், பணத்தை திருப்பித் தரும் வரை விஷால் பட நிறுவனம் தயாரிக்கும் படத்தை தங்களுக்கு வழங்க வேண்டும் என்று ஒப்பந்தம் செய்தது. ஆனால் இந்த ஒப்பந்தத்தை மீறி நடிகர் விஷாலின் வீரமே வாகை சூடும் என்ற படத்தை வெளியிட்டார். இதை எதிர்த்து சென்னை ஐகோர்ட்டில், லைகா நிறுவனம் வழக்கு தொடர்ந்தது.
தடை
இந்த வழக்கை விசாரித்த தனி நீதிபதி, ரூ.15 கோடியை ஐகோர்ட்டில் டெபாசிட் செய்ய நடிகர் விஷாலுக்கு உத்தரவிட்டார். அந்த உத்தரவை எதிர்த்து விஷால் தாக்கல் செய்த மேல்முறையீட்டு வழக்கை விசாரித்த இரு நீதிபதிகள் அமர்வு, தனி நீதிபதியின் உத்தரவை உறுதி செய்தனர். மேலும், இந்த தொகையை டெபாசிட் செய்யாவிட்டால் தனி நீதிபதியின் முன்பாக உள்ள வழக்கில் இறுதி தீர்ப்பு பிறப்பிக்கும் வரை நடிகர் விஷால் தயாரிக்கும் படங்களை திரையரங்குகள் மற்றும் ஓடிடி தளங்களில் வெளியிடக்கூடாது, என தடை விதித்தும் உத்தரவிட்டனர்.
அவமதிப்பு
இந்த உத்தரவை விஷால் மீறிவிட்டதாகவும், தற்போது வரை ரூ.15 கோடியை டெபாசிட் செய்யவில்லை எனவும் குற்றம்சாட்டி விஷாலுக்கு எதிராக ஐகோர்ட்டில் லைகா நிறுவனம் தரப்பில் கோர்ட்டு அவமதிப்பு வழக்கு தொடரப்பட்டது.
இந்த வழக்கு நீதிபதி எஸ்.சவுந்தர் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது எங்களது நிறுவனம் சார்பாக எந்த படங்களையும் புதிதாக தயாரிக்கவில்லை என விஷால் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
குற்றச்சாட்டு பதிவு
இதையடுத்து நீதிபதி, "இந்த விவகாரத்தில் கோர்ட்டு அவமதிப்பு இருப்பதாக தெரியவில்லை. அதனால், இந்த வழக்கை தள்ளுபடி செய்கிறேன். மேலும் விஷால் பட நிறுவனத்துக்கு எதிராக லைகா நிறுவனம் தொடர்ந்துள்ள பிரதான வழக்கில் வரும் 26-ந்தேதி குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்படும்" என்று உத்தரவிட்டார்.