தேக்கு-ஈட்டி மரங்கள் வெட்டி கடத்த முயன்ற கள ஆய்வாளர் பணியிடை நீக்கம்


தேக்கு-ஈட்டி மரங்கள் வெட்டி கடத்த முயன்ற கள ஆய்வாளர் பணியிடை நீக்கம்
x

காளிகேசத்தில் தேக்கு மற்றும் ஈட்டி மரங்களை வெட்டி கடத்த முயன்றது தொடர்பாக கள ஆய்வாளர் பணி இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

கன்னியாகுமரி

அழகியபாண்டியபுரம்:

காளிகேசத்தில் தேக்கு மற்றும் ஈட்டி மரங்களை வெட்டி கடத்த முயன்றது தொடர்பாக கள ஆய்வாளர் பணி இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

மரங்கள் வெட்டப்பட்டன

குமரி மாவட்டம் ஒரு லட்சத்து 60 ஆயிரம் ஹெக்டர் நிலப்பரப்பு கொண்டது. இதில் 48 ஆயிரம் ஹெக்டர் பரப்பில் காடுகள் உள்ளன. இங்கு அரசு ரப்பர் தோட்டத்தில் தேங்கு, ஈட்டி, வேங்கை உள்ளிட்ட உயர்ரக மரங்கள் உள்ளன.

இந்த நிலையில் காளிகேசம் பகுதியில் சுமார் 10 ஏக்கரில் நின்ற 100-க்கும் மேற்பட்ட தேக்கு, ஈட்டி உள்ளிட்ட சில மரங்கள் வெட்டப்பட்டன. கடந்த மார்ச், ஏப்ரல் மாதங்களில் இந்த மரங்கள் வெட்டப்பட்டுள்ளன. ரப்பர் கழகம் மற்றும் வனத்துறைக்கு தெரியாமல் இந்த சம்பவம் நடந்துள்ளது.

பலகோடி ரூபாய் இழப்பு

இதைத்தொடர்ந்து வெட்டப்பட்ட மரங்களை கடத்திச் செல்வதற்காக எந்திரம் மூலம் மரத்தை அறுக்கும் பணி நடந்துள்ளது. அப்போது மரம் அறுக்கும் சத்தம் கேட்டு ரப்பர் தோட்ட தொழிலாளர்கள் வனத்துறை தலைமை பாதுகாப்பு அதிகாரிக்கு புகார் மனு அனுப்பினர். அதன்பேரில் நெல்லை மண்டல வனத்துறை விசாரணை அதிகாரிகள், அரசு ரப்பர் கழக அதிகாரிகள் ஆகியோர் நேரில் வந்து ஆய்வு செய்தனர். அப்போது விலை உயர்ந்த மரங்கள் வெட்டப்பட்டது உறுதிபடுத்தப்பட்டது. வெட்டப்பட்ட மரங்கள் கடத்திச் செல்லப்பட்டு இருந்தால் அரசுக்கு பல கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டு இருக்கும் என்று கூறப்படுகிறது.

பணி இடைநீக்கம்

இதைத் தொடர்ந்து விலை உயர்ந்த மரங்களை வெட்டி கடத்த முயன்றதாக ரப்பா் மரம் நடும் கள அலுவலர் காட்வின் என்பவர் பணி இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார். இந்த சம்பவத்தில் வேறு யாருக்கும் தொடர்பு உள்ளதா? என்பது குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. மேலும், வெட்டப்பட்ட மரங்களிள் மதிப்பை கணக்கிடும் பணியும் நடைபெற்று வருகிறது.


Next Story