தீயணைப்பு வீரர் பணியிடை நீக்கம்
மனைவிக்கு தெரியாமல் 2-வது திருமணம் செய்த தீயணைப்பு வீரர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார்.
கடலூர் வண்ணாரப்பாளையம் கே.கே.நகரை சேர்ந்தவர் கந்தவேல் (வயது 38). தீயணைப்பு வீரரான இவர், கடலூரில் உள்ள தீயணைப்பு நிலைய அலுவலகத்தில் தீயணைப்பு வாகனம் ஓட்டி வருகிறார். இவரது மனைவி சோலையம்மாள் (29). இவர்களுக்கு 2 பெண் குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில் கந்தவேலுக்கு கடந்த 7 மாதங்களுக்கு முன்பு கடலூர் கோண்டூர் மடுகரை பகுதியை சேர்ந்த ஊர்க்காவல் படை பெண் ஊழியர் பாரதியுடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. பாரதி ஏற்கனவே திருமணமாகி கணவரை பிரிந்து வாழ்ந்து வந்தார்.
இதற்கிடையே கடந்த 3 மாதங்களுக்கு முன்பு பாரதியை, கந்தவேல் 2-வதாக திருமணம் செய்து கொண்டார். இதுபற்றி அறிந்த சோலையம்மாள், தனது கணவரை தட்டிக்கேட்டதால், அவர் கொலை மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து சோலையம்மாள் கொடுத்த புகாரின் பேரில் கடலூர் அனைத்து மகளிர் போலீஸ் இன்ஸ்பெக்டர் மகேஸ்வரி வழக்குப்பதிவு செய்து கந்தவேலை கைது செய்தார்.
இந்த நிலையில் முதல் மனைவிக்கு தெரியாமல், ஊர்க்காவல் படை பெண் ஊழியரை 2-வது திருமணம் செய்து போலீசாரால் கைது செய்யப்பட்ட கந்தவேலை பணியிடை நீக்கம் செய்து, தீயணைப்பு நிலைய மாவட்ட அலுவலர் குமார் உத்தரவிட்டுள்ளார்.