சித்திரை திருவிழாவில் பக்தர்களுக்கு அடிப்படை வசதி கோரிய வழக்கு தள்ளுபடி- மதுரை ஐகோர்ட்டு உத்தரவு
சித்திரை திருவிழாவில் பக்தர்களுக்கு அடிப்படை வசதி கோரிய வழக்கை தள்ளுபடி செய்து மதுரை ஐகோர்ட்டு உத்தரவிட்டது.
சித்திரை திருவிழாவில் பக்தர்களுக்கு அடிப்படை வசதி கோரிய வழக்கை தள்ளுபடி செய்து மதுரை ஐகோர்ட்டு உத்தரவிட்டது.
சித்திரை திருவிழா
சிவகங்கை மாவட்டத்தை சேர்ந்த மணிகண்டன், மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருந்ததாவது:-
மதுரை மீனாட்சி அம்மன் கோவில் உலக பிரசித்தி பெற்றது. ஒவ்வொரு ஆண்டும் சித்திரை திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கி அழகர் வைகை ஆற்றில் எழுந்தருளும் நிகழ்ச்சி என தொடர்ச்சியாக விழாக்கள் நடைபெறும். இந்த ஆண்டு வருகிற 23-ந் தேதி முதல் மே மாதம் 9-ந் தேதி வரை மதுரை சித்திரை திருவிழா நடைபெற உள்ளது.
இந்த விழாவில் லட்சக்கணக்கான பக்தர்கள் வெவ்வேறு பகுதிகளில் இருந்து வந்து கலந்து கொள்வர். கடந்த ஆண்டு திருவிழாவின் போது கூட்ட நெரிசலால் 2 பேர் மூச்சு திணறி இறந்தனர். 24 பேர் காயம் அடைந்தனர்.
அடிப்படை வசதிகள்
அதுபோல அசம்பாவிதங்கள் ஏதும் நிகழாத வண்ணம் இந்த ஆண்டு உரிய நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும் என வலியுறுத்தி அதிகாரிகளிடம் மனு அளிக்கப்பட்டது. எந்த பதிலும் இல்லை. எனது மனுவின் அடிப்படையில் மதுரை மீனாட்சி திருக்கல்யாணத்தின் போது இலவச தரிசனம் செய்வதற்கு ஏற்பாடு செய்ய உத்தரவிட வேண்டும்.
அதேபோல சித்திரை திருவிழா நேரங்களில் குடிநீர், கழிப்பறை வசதிகளை செய்து தருவதற்கும், சாலைகளை முறையாகவும், தூய்மையாகவும் பராமரிப்பது, போதுமான மருத்துவ வசதிகளை தயார் நிலையில் வைத்திருப்பது, தாழ்வான மின் வயர்களை சரி செய்வது, பக்தர்களின் பாதுகாப்பை உறுதி செய்வது தொடர்பாக நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும்.
இவ்வாறு மனுவில் கூறியிருந்தார்.
இதே போல மதுரையை சேர்ந்த ரமேஷ் தாக்கல் செய்த மனுவில், சித்திரை திருவிழாவை முன்னிட்டு கோவில் பகுதிகளில் கிருமிநாசினி தெளிக்க உத்தரவிட வேண்டும் என்று கூறியிருந்தார்.
தள்ளுபடி
இந்த வழக்குகளை நீதிபதிகள் சுப்பிரமணியன், விக்டோரியா கவுரி ஆகியோர் முன்பு விசாரணைக்கு வந்தது.
அப்போது நீதிபதிகள், சித்திரை திருவிழாவை நடத்தும் மீனாட்சி அம்மன் கோவில் மற்றும் அழகர் கோவில் நிர்வாகத்தினரும், மாவட்ட நிர்வாகமும் சித்திரை திருவிழாவிற்கான ஏற்பாடுகளை செய்கிறார்கள். மனுதாரரின் மனு தொடர்பாக அவர்கள் முடிவு செய்வார்கள். எனவே இந்த விவகாரத்தில் கோர்ட்டு தலையிட இயலாது எனக்கூறி, வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.