2011-ம் ஆண்டு பணிநீக்கம் செய்யப்பட்ட மக்கள் நலப்பணியாளர்களுக்கு மீண்டும் பணி
2011-ம் ஆண்டு பணி நீக்கம் செய்யப்பட்ட மக்கள் நலப்பணியாளர்கள் மீண்டும் பணி வாய்ப்பு பெற நாளை மறுநாள் முதல் விண்ணப்பிக்கலாம் என்று கலெக்டர் தெரிவித்துள்ளார்
மக்கள் நலப்பணியாளர்கள்
தேனி மாவட்ட கலெக்டர் முரளிதரன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:-
ஊரக வளர்ச்சித்துறையின் கீழ் பணியாற்றிய மக்கள் நலப்பணியாளர்கள் கடந்த 2011-ம் ஆண்டு நவம்பர் 8-ந்தேதி பணி நீக்கம் செய்யப்பட்டனர். அவ்வாறு பணி நீக்கம் செய்யப்பட்ட மக்கள் நலப்பணியாளர்களை தற்போது மகாத்மா காந்தி தேசிய வேலை உறுதியளிப்பு திட்டத்தில் வேலை உறுதித்திட்ட பணி ஒருங்கிணைப்பாளராக பணியில் ஈடுபட தமிழக அரசு வாய்ப்பளித்துள்ளது.
இந்த பணிக்கென மகாத்மா காந்தி தேசிய வேலை உறுதித் திட்ட நிதியில் இருந்து ரூ.5 ஆயிரம், கிராம ஊராட்சி பணிகளுக்காக ரூ.2,500 என மொத்தம் ரூ.7,500 தொகுப்பூதியம் வழங்கப்படும். எனவே, 2011-ம் ஆண்டு பணி இழந்த முன்னாள் மக்கள் நலப்பணியாளர்கள், இந்த பணியில் ஈடுபட விருப்பம் இருந்தால் தாங்கள் ஏற்கனவே பணிபுரிந்த வட்டாரத்தின் வட்டார வளர்ச்சி அலுவலரை (கிராம ஊராட்சி) தொடர்பு கொள்ள வேண்டும்.
விண்ணப்பம்
மேலும், இதுதொடர்பாக வட்டார வளர்ச்சி அலுவலரிடம் ஏற்கனவே பணியாற்றியதற்கான விவரத்துடன், பணியில் ஈடுபடவுள்ளதற்கான விருப்ப கடிதத்தையும் நாளை மறுநாள் (திங்கட்கிழமை) முதல் வருகிற 18-ந்தேதி வரை வழங்கலாம். அவ்வாறு பணியில் ஈடுபட விருப்பம் தெரிவிப்பவர்களின் விருப்ப கடிதம் பரிசீலனை செய்யப்பட்டு அடுத்த மாதம் (ஜூலை) 1-ந்தேதி முதல் பணியாற்ற வாய்ப்பு வழங்கப்படும்.
எனவே, முன்னாள் மக்கள் நலப் பணியாளர்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ள விண்ணப்பிக்க வேண்டும். அத்தகைய விருப்ப விண்ணப்பங்கள் மட்டுமே இந்த பணியில் ஈடுபட பரிசீலனை செய்யப்பட உள்ளதால் குறிப்பிட்ட காலத்துக்குள் விருப்பம் தெரிவிக்க வேண்டும். காலக்கெடு முடிந்து வரும் விண்ணப்பங்கள் பரிசீலனைக்கு ஏற்று கொள்ளப்படாது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.