பணி நீக்கம் செய்யப்பட்ட மக்கள் நலப்பணியாளர்கள் வேலை உறுதித்திட்ட ஒருங்கிணைப்பாளர் பணிக்கு விண்ணப்பிக்கலாம்
தூத்துக்குடி மாவட்டத்தில் பணி நீக்கம் செய்யப்பட்ட மக்கள் நலப்பணியாளர்கள் வேலை உறுதித்திட்ட ஒருங்கிணைப்பாளர் பணிக்கு விண்ணப்பிக்கலாம் என கலெக்டர் செந்தில்ராஜ் தெரிவித்துள்ளார்.
தூத்துக்குடி:
பணி நீக்கம் செய்யப்பட்ட மக்கள் நலப்பணியாளர்கள் வேலை உறுதித் திட்ட ஒருங்கிணைப்பாளராக பணியில் ஈடுபட விருப்ப கடிதம் அளிக்கலாம் என்று மாவட்ட கலெக்டர் செந்தில்ராஜ் தெரிவித்து உள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறி இருப்பதாவது:-
மக்கள் நலப்பணியாளர்கள்
ஊரக வளர்ச்சி ஊராட்சித் துறையில் பணியாற்றிய மக்கள் நலப்பணியாளர்கள் 08.11.2011 அன்று பணிநீக்கம் செய்யப்பட்டனர். இந்த பணியாளர்கள் தற்போது அரசு மகாத்மா காந்தி தேசிய வேலை உறுதித் திட்டத்தில், வேலை உறுதித் திட்ட பணி ஒருங்கிணைப்பாளராக பணியில் ஈடுபட வாய்ப்பளித்து உள்ளது. இந்த பணிக்கு மகாத்மா காந்தி தேசிய வேலை உறுதித் திட்ட நிதியில் இருந்து ரூ.5 ஆயிரமும், கூடுதலாக கிராம ஊராட்சிப்பணிகளுக்காக ரூ.2 ஆயிரத்து 500 ஆக மொத்தம் ரூ.7 ஆயிரத்து 500 மாதம் ஒன்றுக்கு ஒட்டுமொத்த தொகுப்பூதியம் வழங்கப்படும்.
எனவே, 08.11.2011 அன்று பணியிழந்த இந்த பணியில் ஈடுபட விருப்பம் உள்ள முன்னாள் மக்கள் நலப்பணியாளர்கள் தாங்கள் ஏற்கனவே பணிபுரிந்த வட்டாரத்தின் வட்டார வளர்ச்சி அலுவலரை (கிராம ஊராட்சி) தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது. இது தொடர்பாக வட்டார வளர்ச்சி அலுவலரிடம் (கிராம ஊராட்சி) ஏற்கனவே பணியாற்றியதற்கான விவரத்துடன் பணியில் ஈடுபட உள்ளதற்கான விருப்பக் கடிதத்தையும் வட்டார திட்ட ஒருங்கிணைப்பாளர், வட்டார வளர்ச்சி அலுவலரிடம் (கிராம ஊராட்சி) 13.6.2022 முதல் 18.6.2022-க்குள் வழங்கலாம்.
விருப்ப கடிதம்
அவ்வாறு பணியில் ஈடுபட விருப்பம் தெரிவிப்பவர்களது விருப்பக் கடிதம் பரிசீலிக்கப்பட்டு 1.7.2022 முதல் பணியாற்ற வாய்ப்பு வழங்கப்படும். எனவே 8.11.2011 அன்று பணிநீக்கம் செய்யப்பட்ட முந்தைய மக்கள் நலப்பணியாளர்கள் இந்த பணி வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ள 13.6.2022 முதல் 18.6.2022க்குள் தவறாமல் தங்களது விருப்பத்தை தெரிவிக்குமாறும், விருப்ப விண்ணப்பங்கள் மட்டுமே இந்த பணியில் ஈடுபட பரிசீலிக்கப்பட உள்ளதால் குறிப்பிட்ட காலத்துக்குள் விருப்பம் தெரிவிக்கவும், காலம் கடந்து வரப்பெறும் விண்ணப்பங்கள் பரிசீலிக்க இயலாது என்பதால் குறித்த காலத்தில் விண்ணப்பித்து இந்த பணி வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ளுமாறும் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
இவ்வாறு அவர் தெரிவித்து உள்ளார்.