புன்னம் ஊராட்சியில் வாக்குப்பதிவின்போது இரு தரப்பினர் இடையே தகராறு
வாக்குப்பதிவின்போது இரு தரப்பினர் இடையே தகராறு ஏற்பட்டது.
கரூர் மாவட்டம், புன்னம் ஊராட்சி 3-வது வார்டு உறுப்பினர் பதவிக்கு காலை 7 மணிக்கு தொடங்கி விறுவிறுப்பாக வாக்குப்பதிவு நடைபெற்றது. மதியம் வரை சுமார் 246 வாக்குகள் பதிவாகி இருந்தது. இந்தநிலையில், வாக்குச்சாவடிக்குள் வேட்பாளர்கள் அடிக்கடி வந்து சென்றனர். அதேபோல் அங்கிருந்த பூத் ஏஜெண்டுகளும் குறிப்பிட்ட சிலருக்கு வாக்களிக்குமாறு அவ்வப்போது கூறியதால் இரு தரப்பினர் இடையே வாக்குவாதம் உண்டாகி தகராறு ஏற்பட்டது. இதையடுத்து வேலாயுதம்பாளையம் சப்-இன்ஸ்பெக்டர் நெப்போலியன் தலைமையிலான போலீசார் வாக்குச்சாவடிக்குள் சென்று அவர்களை அங்கிருந்து வெளியேற்றினர். வெளியே வந்த பிறகும் அவர்கள் தகராறில் ஈடுபட்டனர். இதையடுத்து அனைவரையும் அங்கிருந்து போலீசார் அப்புறப்படுத்தினர். பின்னர் போலீசின் பாதுகாப்புடன் வாக்குப்பதிவு நடந்து முடிந்தது. தேர்தல் நடத்தும் அலுவலர் பரமேஸ்வரன், அரவக்குறிச்சி துணை போலீஸ் சூப்பிரண்டு முத்தமிழ்செல்வன் ஆகியோர் அவ்வப்போது வந்து வாக்கு மையத்தை ஆய்வு செய்தனர்.