மதுரை அருகே கண்மாயில் பானை வைத்து மீன்பிடித்ததில் தகராறு: வீட்டு வாசலில் தூங்கிய தம்பதி வெட்டிக்கொலை -தப்பி ஓடிய 2 பேர் கைது


கண்மாயில் பானை வைத்து மீன்பிடித்ததில் ஏற்பட்ட தகராறில், தனது வீட்டு வாசலில் தூங்கிய தம்பதியை சரமாரியாக வெட்டிக்கொன்ற 2 பேர் கைது செய்யப்பட்டனர்.

மதுரை

மேலூர்,

கண்மாயில் பானை வைத்து மீன்பிடித்ததில் ஏற்பட்ட தகராறில், தனது வீட்டு வாசலில் தூங்கிய தம்பதியை சரமாரியாக வெட்டிக்கொன்ற 2 பேர் கைது செய்யப்பட்டனர்.

இந்த பயங்கர சம்பவம் பற்றி போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-

மீன்பிடித்ததில் தகராறு

மதுரை மாவட்டம் மேலூரை அடுத்த அட்டப்பட்டி அருகே உள்ள ஆண்டிகோவில்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் கருப்பசாமி (வயது 44). இவருடைய மனைவி செல்வி (41). இவர்களுக்கு அஜித்குமார்(23) என்ற மகன் உள்ளார்.

கணவன்-மனைவி இருவரும் தங்கள் கிராமத்தில் உள்ள இளமி கண்மாயில் நேற்று முன்தினம் மாலை மீன்பிடித்தனர். மண் பானை மற்றும் பாய் வைத்து சிறிய மீன்களை பிடித்தனர்.

அதே ஊரை சேர்ந்த இவர்களின் உறவினர்களான ராஜதுரை(40), மழுவேந்தி (43) ஆகியோர் அங்கு வந்தனர். இவர்களுக்கும், கருப்பசாமி தம்பதிக்கும் மீன் பிடிப்பதில் தகராறு ஏற்பட்டது.

கருப்பசாமி மீன் பிடிக்க அமைத்திருந்த பானைப்பொறியை ராஜதுரை சேதப்படுத்தி தூக்கி வீசியதாக கூறப்படுகிறது. இதனையடுத்து கருப்பசாமி, அவரது மனைவி செல்வி ஆகியோர் ராஜதுரையை கண்டித்தனர். இதைதொடர்ந்து இருதரப்பினருக்கும் கடும் வாக்குவாதம் ஏற்பட்டது.

வெட்டிக்கொலை

அவர்களை அந்த பகுதியில் நின்றவர்கள் சமரசம் செய்து வீட்டிற்கு அனுப்பி வைத்தனர். நேற்று முன்தினம் இரவில் கருப்பசாமி, அவரது மனைவி செல்வி ஆகிய இருவரும் வீட்டு வாசலில் படுத்து தூங்கினர். அவர்களது மகன் அஜித்குமார் வீட்டுக்குள் படுத்திருந்தார்.

நள்ளிரவில் ராஜதுரை, மழுவேந்தி ஆகிய இருவரும் அரிவாள் உள்ளிட்ட ஆயுதங்களுடன் அங்கு வந்து கருப்பசாமி, செல்வியை சரமாரியாக வெட்டினர்.

தங்களை காப்பாற்றுமாறு 2 பேரும் அலறினா். அந்த சத்தம் கேட்டு வீட்டுக்குள் படுத்திருந்த கருப்பசாமியின் மகன் அஜித்குமார் பதறியபடி வெளியே ஓடிவந்து பார்த்தார். அப்போது, அரிவாளுடன் மழுவேந்தி, ராஜதுரை ஆகிய இருவரும் தப்பி ஓடியதாக தெரிகிறது.

தன்னுடைய தாய்-தந்தை இருவரும் பலத்த வெட்டுக்காயங்களுடன் ரத்த வெள்ளத்தில் பிணமாக கிடந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்து கதறினார்.

2 பேர் கைது

இதுகுறித்து கீழவளவு போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. மதுரை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சிவபிரசாத், மேலூர் துணை சூப்பிரண்டு ஆர்லியஸ் ரெபோனி, இன்ஸ்பெக்டர் சார்லஸ், சப்-இன்ஸ்பெக்டர் முத்துக்குமார் ஆகியோர் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர்.

போலீஸ் மோப்ப நாய் மூலம் சோதனை நடந்தது. தடயவியல் நிபுணர்கள் தடயங்களை சேகரித்தனர். இந்த இரட்டை கொலை குறித்து வழக்குப்பதிவு செய்த கீழவளவு போலீசார் தீவிர தேடுதல் வேட்டை நடத்தி ராஜதுரை மற்றும் மழுவேந்தி ஆகிய 2 பேரையும் கைது செய்தனர்.

இந்த சம்பவம் மேலூர் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.


Next Story