தொலைதூர கல்வியில் முறைகேடு புகார்: பெரியார் பல்கலைக்கழக துணைப்பதிவாளர் பணி நீக்கம்
தொலைதூர கல்வியில் முறைகேடு புகார் காரணமாக பெரியார் பல்கலைக்கழக துணைப்பதிவாளர் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
கருப்பூர்:
முறைகேடு புகார்
சேலம் பெரியார் பல்கலைக் கழகத்தில் உள்ள தொலைதூர கல்வி இயக்ககம் கடந்த 2013-ம் ஆண்டு தொடங்கப்பட்டது, இதில் பி.ஏ., பி.காம், பி.எஸ்சி., எம்.பில். போன்ற பாடப்பிரிவுகள் நடத்தப்பட்டு வந்தன. இந்த நிலையில் பல்கலைக்கழக விதிகளுக்கு மாறாக தொலைதூர கல்வியில் தொழில்நுட்ப பட்டப்படிப்புகளுக்கு வெளி மாநில படிப்பு மையங்களில் மாணவர் சேர்க்கை நடத்தப்பட்டதுடன், அதற்காக சான்றிதழ் வழங்கப்பட்டு உள்ளன. இதில் பல்வேறு முறைகேடுகள் நடந்ததாக புகார்கள் எழுந்தன.
இந்த நிலையில் பல்கலைக்கழக மானிய குழு (யு.ஜி.சி.) 2015-ம் ஆண்டு வெளி மாநில படிப்பு மையங்களுக்கு தடை விதித்தது. இந்த முறைகேடு குறித்து விசாரிக்க உத்தரவிட்டிருந்தது. அதன்படி சேலம் லஞ்ச ஒழிப்பு துறையினர் தொலைதூர கல்வி இயக்கக அலுவலகத்தில் ஆய்வு நடத்தினர்.
பணி நீக்கம்
அதன்படி அப்போது பணியாற்றிய இயக்குனர் குணசேகரன், உதவி பதிவாளர் ராமன், தொகுப்பூதிய பணியாளர் அன்பரசி ஆகியோர் மீது துறை ரீதியிலான நடவடிக்கை எடுக்க பரிந்துரை செய்தனர். இதில் தமிழ்நாடு திறந்தநிலை பல்கலைக்கழகத்தின் ஓய்வு பெற்ற துணைவேந்தர் பாஸ்கரன், தலைமையில் விசாரணை குழு அமைக்கப்பட்டு குழுவினர் அறிக்கை சமர்ப்பித்தனர். இதன்படி கடந்த சில நாட்களுக்கு முன்பு பெரியார் பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற ஆட்சி குழு கூட்டத்தில் நடவடிக்கை எடுக்க அனுமதி கொடுத்தனர்.
தொடர்ந்து துணை வேந்தர் ஜெகன்நாதன் உத்தரவின் பேரில் பதிவாளர் (பொறுப்பு) பாலகுருநாதன், தற்போது தேர்வு கட்டுப்பாட்டு அலுவலகத்தில் துணைப்பதிவாளராக பணியாற்றி வரும் ராமனை பணிநீக்கம் செய்து உத்தரவிட்டுள்ளார். வருகிற 30-ந் தேதி ராமன் ஓய்வு பெற இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.