குழந்தைகள், இளம்பெண்களுக்கு இன்று குடற்புழு நீக்க மாத்திரை வினியோகம்


குழந்தைகள், இளம்பெண்களுக்கு இன்று குடற்புழு நீக்க மாத்திரை வினியோகம்
x
தினத்தந்தி 17 Aug 2023 12:15 AM IST (Updated: 17 Aug 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

குமரி மாவட்டத்தில் குழந்தைகள், இளம்பெண்களுக்கு இன்று குடற்புழு மாத்திரை வினியோகம் செய்யப்படும் என கலெக்டர் அறிவித்துள்ளார்.

கன்னியாகுமரி

நாகர்கோவில்:

குமரி மாவட்டத்தில் குழந்தைகள், இளம்பெண்களுக்கு இன்று குடற்புழு மாத்திரை வினியோகம் செய்யப்படும் என கலெக்டர் அறிவித்துள்ளார்.

இதுதொடர்பாக மாவட்ட கலெக்டர் ஸ்ரீதர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

ரத்த சோகை

வளரும் குழந்தைகளுக்கு குடற்புழுக்கள் இருந்தால் உடல் வளர்ச்சி குறைபாடு, ரத்த சோகை மற்றும் ஊட்டச்சத்து குறைபாடு ஏற்படுகிறது. 20 முதல் 30 வயதுள்ள இளம்பெண்களுக்கு குடற்புழுக்கள் இருந்தால், ரத்த சோகை ஏற்பட்டு எடை குறைவுள்ள குழந்தைகள் பிறக்க வாய்ப்புள்ளது. மேற்கண்ட குறைபாடுகளை களைவதற்கு ஆண்டுக்கு இருமுறை குடற்புழு நீக்க மாத்திரை கொடுப்பதுடன் கைகழுவுதல், கழிப்பறைகளை பயன்படுத்துதல் மற்றும் தன் சுத்தம் பேணுதல் ஆகியவற்றை குழந்தைகளுக்கு கற்றுக்கொடுப்பதன் மூலம் ரத்த சோகை மற்றும் ஊட்டச்சத்து குறைபாடுகளை நீக்கலாம்.

இந்த ஆண்டு இன்று (வியாழக்கிழமை) ஒரு வயது முதல் 19 வயது வரையிலுள்ள அனைத்து குழந்தைகள், வளர் இளம் பருவத்தினர் மற்றும் 20 முதல் 30 வயது வரையுள்ள இளம்பெண்களுக்கு குடற்புழு நீக்கம் செய்யும் பொருட்டு அல்பெண்டாசோல் மாத்திரை வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

குடற்புழு நீக்க மாத்திரை

அதன்படி அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகள், தனியார் பள்ளிகள் மற்றும் கல்லூரிகளில் மதிய உணவிற்கு பின்பு ஒரு குடற்புழு நீக்க மாத்திரை வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

பள்ளி செல்லா குழந்தைகளுக்கும், 20 வயது முதல் 30 வயது வரை உள்ள கல்லூரி செல்லா பெண்களுக்கும், ஊட்டச்சத்து மையத்திலும், துணை சுகாதார நிலையத்திலும் மாத்திரை வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. வேலைக்கு செல்லும் பெண்களுக்கு பணியிடங்களில் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மாணவர்கள் மாத்திரைகள் உட்கொண்டார்கள் என்பதை ஆசிரியர்கள் உறுதி செய்ய வேண்டும். இந்த மாத்திரையை கடித்து சுவைத்து சாப்பிட வேண்டும்.

6.33 லட்சம் பேருக்கு...

இதன்மூலம் குமாி மாவட்டத்தில் 1 முதல் 19 வயதுக்குட்பட்ட 5,58,766 பேரும், 20 முதல் 30 வயது வரை உள்ள இளம் பெண்கள் 75,043 பேரும் பயனடைவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கு தேவையான மாத்திரைகள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது. மாத்திரைகள் உட்கொள்வதால் எந்தவிதமான பக்க விளைவுகளும் ஏற்படுவதில்லை. மற்ற காரணங்களால் இன்று (வியாழக்கிழமை) மாத்திரை உட்கொள்ளாத குழந்தைகள் மற்றும் இளம்பெண்களுக்கு வருகிற 24-ந் தேதி மாத்திரை வழங்கப்படும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


Next Story