ரேஷன் கடைகளில் மாற்றுத்திறனாளிகளுக்கு பிரதிநிதி மூலம் உணவுப்பொருட்கள் வினியோகம்- ஆணைய தலைவர் வாசுகி தகவல்
ரேஷன் கடைகளில் மாற்றுத்திறனாளிகளுக்கு அவர்களுடைய பிரதிநிதிகள் மூலம் உணவுப்பொருட்கள் வினியோகிக்க வேண்டும் என்று உணவு ஆணைய தலைவர் வாசுகி கூறியுள்ளார்
ரேஷன் கடைகளில் மாற்றுத்திறனாளிகளுக்கு அவர்களுடைய பிரதிநிதிகள் மூலம் உணவுப்பொருட்கள் வினியோகிக்க வேண்டும் என்று உணவு ஆணைய தலைவர் வாசுகி கூறியுள்ளார்.
ஆய்வுக்கூட்டம்
விளிம்பு நிலையிலுள்ள மக்களின் உணவு பாதுகாப்பினை உறுதி செய்யும் நோக்கில் மண்டல அளவிலான ஆய்வுக்கூட்டம் மாநில உணவு ஆணைய தலைவர் வாசுகி தலைமையில் நெல்லை மாவட்ட கலெக்டர் விஷ்ணு முன்னிலையில் அலுவலக கூட்டரங்கில் நேற்று நடைபெற்றது.
இந்த ஆய்வு கூட்டத்தில் நெல்லை, தென்காசி, கன்னியாகுமரி, தூத்துக்குடி மற்றும் விருதுநகர் மாவட்டங்களை சேர்ந்த மாவட்ட வழங்கல் அலுவலர்கள், வட்ட வழங்கல் அலுவலர்கள், நுகர்பொருள் வாணிபக்கழக மண்டல மேலாளர்கள், கூட்டுறவு துணை பதிவாளர்கள், சமூகநலத்துறை அலுவலர்கள், சத்துணவு திட்ட அலுவலர்கள் மற்றும் ஒருங்கிணைந்த ஊட்டச்சத்து திட்ட அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
மாற்றுத்திறனாளிகள்
கூட்டத்தில் மாநில உணவு ஆணைய தலைவர் வாசுகி பேசியதாவது:-
சமூகத்தில் பின் தங்கிய நிலையிலுள்ள திருநங்கைகள், கணவரால் கைவிடப்பட்டோர், கணவரை இழந்தவர்கள், நரிக்குறவர்கள், பழங்குடியினர் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு முன்னுரிமை அடிப்படையில் ரேஷன் கார்டுகள் வழங்கி அவர்களது உணவுப் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும்.
நெல்லை மண்டலத்தில் உள்ள 5 மாவட்டங்களின் அனைத்து வட்ட வழங்கல் அலுவலகங்களிலும் விளம்பர பலகைகள் வைக்க வேண்டும். ரேஷன்கடைகளுக்கு நேரில் வர இயலாத முதியோர் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு பிரதிநிதிகள் மூலம் அத்தியாவசிய பொருட்கள் பெறுவதற்கான அங்கீகார படிவங்கள் அனைத்து கடைகளிலும் வழங்கப்படுவது உறுதி செய்யப்பட வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
ஆய்வுக்கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் ஜெயஸ்ரீ, மாநில உணவு ஆணைய உறுப்பினர் கணேசன், இணை பதிவாளர் அழகிரி, மாவட்ட வழங்கல் அலுவலர் வள்ளிக்கண்ணு மற்றும் அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.