விளாத்திகுளம் அருகே 200 பெண் பயனாளிகளுக்கு ஆடுகள் வழங்கல்
விளாத்திகுளம் அருகே 200 பெண் பயனாளிகளுக்கு ஆடுகள் வழங்கப்பட்டது.
எட்டயபுரம்:
விளாத்திகுளத்தில் கால்நடை பராமரிப்புத்துறை சார்பில் விதவைகள் மற்றும் கணவனால் கைவிடப்பட்ட, ஆதரவற்ற பயனாளிகளுக்கு பெண் தொழில் முனைவோர்களாக உருவாக்கும் திட்டத்தின் கீழ் ஆடுகள் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. இந்த நிகழ்ச்சிக்கு கால்நடை பராமரிப்பு உதவியாளர் ஜெயராமன் தலைமை தாங்கினார். தி.மு.க தலைமை செயற்குழு உறுப்பினர் ராதாகிருஷ்ணன், தி.மு.க கிழக்கு ஒன்றிய செயலாளர் செல்வராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். 100 பெண் பயனாளிகளுக்கு ஆடுகளை மார்க்கண்டேயன் எம்.எல்.ஏ. வழங்கினார். இந்நிகழ்ச்சியில் பேரூராட்சி தலைவர் அயன் ராஜ், புதூர் பேரூராட்சி மன்றத் தலைவர் பச்சைமலை, விளாத்திகுளம் சட்டமன்ற தொகுதி தி.மு.க. சமூக வலைதள அமைப்பாளர் ஸ்ரீதர் உள்பட பலர் கலந்து கொண்டனர். அதனைத் தொடர்ந்து விளாத்திகுளம் அருகே உள்ள புதூரில் கால்நடை பராமரிப்புத்துறை சார்பில் நடந்த நிகழ்ச்சியில் 100 பெண் பயனாளிகளுக்கு ஆடுகளை எம்.எல்.ஏ. வழங்கினார். புதூர் பேரூராட்சி அலுவலகம் அருகே 100 மரக்கன்றுகளையும் அவர் நட்டினார். இந்த நிகழ்ச்சியில் கால்நடை பராமரிப்புத்துறை அதிகாரிகள், தி.மு.க நிர்வாகிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
மேலும், விளாத்திகுளம் வேளாண்மைத்துறை அலுவலகத்தில் விளாத்திகுளம், கே.குமரெட்டியாபுரம், கே.தங்கம்மாள்புரம் ஆகிய கிராமங்களைச் சேர்ந்த உழவர் உற்பத்தியாளர் குழுக்களுக்கு கூட்டு பண்ணையத் திட்டத்தில் ரூ.15 லட்சம் மதிப்புள்ள விவசாய உபகரணங்கள் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. இந்த நிகழ்ச்சியில் மார்க்கண்டேயன் எம்.எல்.ஏ. கலந்துகொண்டு உழவர் உற்பத்தியாளர் குழுக்களுக்கு சுழற்கலப்பை, பல்வகை கதிரடிக்கும் எந்திரம், புல் வெட்டும் எந்திரம், களை எடுக்கும் எந்திரம் என பல்வேறு விவசாய உபகரணங்களை வழங்கினார். அதனைத்தொடர்ந்து விவசாயிகளுக்கான சிறப்பு பயிற்சி முகாம் அலுவலக கூட்ட அரங்கில், தூத்துக்குடி மாவட்ட வேளாண்மை இணை இயக்குனர் முகைதீன் தலைமையில் சிறப்பு பயிற்சி முகாம் நடந்தது. இதில் உழவர் பயிற்சி நிலைய வேளாண்மை துணை இயக்குனர் ஜெய செல்வின் இன்பராஜ், வேளாண்மை உதவி இயக்குனர் கீதா, துணை வேளாண்மை அலுவலர் முத்துசாமி, மற்றும் வேளாண்மை அலுவலர்கள் உதவி வேளாண்மை அலுவலர்கள், அட்மா திட்ட பணியாளர்கள், பயிர் காப்பீட்டு களப்பணியாளர்கள் என பலர் கலந்துகொண்டு விவசாயிகளுக்கு சிறப்பு பயிற்சி அளித்தனர். இந்நிகழ்ச்சியில் எம்.எல்.ஏ. சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு விளாத்திகுளம் சுற்றுவட்டார பகுதியில் ஒரு கோடி மரங்கள் நடுவதற்கான திட்டம் குறித்து விளக்கி கூறி பொதுமக்கள் அனைவரும் கட்டாயம் மரம் நடும் பணியில் ஈடுபட வேண்டும் என கேட்டுக் கொண்டார்.