100 சதவீத மானியத்தில் விவசாயிகளுக்கு மரக்கன்றுகள் வினியோகம்
பசுமை போர்வைக்கான இயக்க திட்டம் மூலம 100 சதவீத மானியத்தில் விவசாயிகளுக்கு மரக்கன்றுகள் வினியோகம் செய்யப்படுகிறது.
தமிழ்நாடு நீடித்த பசுமை போர்வைக்கான இயக்க திட்டத்தில் விவசாய நிலங்களில் மரக்கன்றுகள் நடவு செய்திட வேளாண்மை துறையின் மூலம் மகாகனி, ரெட் சாண்டல், ரோஸ்வுட், வேங்கை மற்றும் பூவரசு போன்ற பயன்தரும் மரக்கன்றுகள் 100 சதவீத மானியத்தில் விவசாயிகளுக்கு வழங்கப்பட்டு வருகிறது. ஒரு விவசாயிக்கு அதிகபட்சம் 2 எக்டர் அதாவது 5 ஏக்கர் வரை வழங்கப்படுகிறது. வரப்பு ஓரங்களில் அல்லது வயலின் ஓரங்களில் மரக்கன்றுகளை நடவு செய்திட ஒரு விவசாயிக்கு ஏக்கருக்கு 64 மரக்கன்றுகள் வீதம் அதிகபட்சம் 5 ஏக்கருக்கு 320 மரக்கன்றுகள் முழு மானியத்தில் வழங்கப்படுகிறது. வயல்களில் மரக்கன்றுகள் நடவு செய்ய வாய்ப்புள்ள விவசாயிகளுக்கு ஒரு ஏக்கருக்கு 40 முதல் 200 கன்றுகள் வரை அதிகபட்சமாக ஒரு விவசாயிக்கு 5 ஏக்கருக்கு 200 முதல் 1,000 மரக்கன்றுகள் வரை வழங்கப்படுகிறது. தற்போது வடகிழக்கு பருவமழை பெய்து வரும் நிலையில் விவசாயிகள் தங்கள் வயல்களில், வரப்பு ஓரங்களில், வயலின் ஓரங்களில் மரக்கன்றுகள் நடவு செய்தால் வேர் நன்கு உயிர் பிடித்து வளரும். இத்திட்டத்தில் மரக்கன்றுகள் பெற விவசாயிகள் தங்களுடைய சிட்டா, ஆதார் அட்டை நகல், வங்கி சேமிப்பு கணக்கு புத்தக நகல், விவசாயிகளின் புகைப்படம் ஆகிய ஆவணங்களை தயார் செய்து தங்கள் பகுதி உதவி வேளாண்மை அலுவலர் அல்லது ஆலத்தூர் வேளாண்மை விரிவாக்க மையத்தில் வழங்கிட கேட்டுக் கொள்ளப்படுகிறது. மேலும் விவசாயிகள் தாங்களாகவே உழவன் செயலியில் பதிவு செய்து கொள்ளலாம். பதிவு செய்த விவசாயிகளின் விவரங்களை உதவி வேளாண்மை அலுவலர்கள் தங்கள் வயல்களுக்கு நேரில் களஆய்வு செய்து மரக்கன்றுகள் நடுவதற்கு தகுதியாக இருக்கும் பட்சத்தில் ஒப்புதல் வழங்கி மரக்கன்றுகள் வினியோகம் செய்யப்படும்.
பெரம்பலூர் மாவட்டம் ஆலத்தூர் வட்டாரத்தில் நடப்பாண்டு கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண்மை வளர்ச்சி திட்டம் செயல்படுத்தப்படும் கிராமங்களான பாடாலூர், மாவிலங்கை, சிறு வயலூர், வரகுப்பாடி, பிலிமிசை, புஜங்கராயநல்லூர், கொட்டரை, குரும்பாபாளையம், சில்லக்குடி மற்றும் ஜமீன் பேரையூர் ஆகிய கிராமங்களின் விவசாயிகளுக்கு முன்னுரிமை வழங்கப்படுகிறது. எனவே ஆலத்தூர் வட்டார விவசாயிகள் உடன் தங்கள் பகுதி உதவி வேளாண்மை அலுவலர் அல்லது ஆலத்தூர் வேளாண்மை விரிவாக்க மையத்தில் உரிய ஆவணங்களோடு தொடர்பு கொண்டு இத்திட்டத்தில் பயன்பெறுமாறு ஆலத்தூர் வட்டார வேளாண்மை உதவி இயக்குனர் எஸ்.ராஜசேகரன் கேட்டுக் கொண்டுள்ளார்.