வேளாண்மை விரிவாக்க மையம் மூலம் விதைகள் வினியோகம்
திருவாடானை தாலுகாவில் விதைப்பு பணிகளை மேற்கொள்ள விவசாயிகள் ஆர்வமுடன் விதைகளை வாங்கி செல்கின்றனர்.
தொண்டி,
திருவாடானை தாலுகாவில் விதைப்பு பணிகளை மேற்கொள்ள விவசாயிகள் ஆர்வமுடன் விதைகளை வாங்கி செல்கின்றனர்.
வேளாண் பணி
திருவாடானை தாலுகா ராமநாதபுரம் மாவட்டத்தின் நெற்களஞ்சியம் என அழைக்கப்படும் பகுதியாகும். இந்த தாலுகாவில் ஒவ்வொரு ஆண்டும் சுமார் 26 ஆயிரத்து 500 எக்டேர் நிலப்பரப்பில் நெற்பயிர் சாகுபடி நடைபெற்று வருகிறது. தாலுகாவில் ஆண்டுதோறும் விவசாயிகள் ஆவணி மாதத்தில் விதைப்பு பணியை மேற்கொள்வது வழக்கம். அதன் அடிப்படையில் இந்த ஆண்டு நெற்பயிற் விவசாய பணிகளை மேற்கொள்வதற்கு விவசாயிகள் தங்கள் நிலங்களை உழுது தயார் நிலையில் வைத்துள்ளனர்.
இந்நிலையில் திருவாடானை வேளாண்மை விரிவாக்க மையத்தில் விவசாயிகளுக்கு தேவையான நெல் விதைகளை வேளாண்மை அதிகாரிகள் முன்கூட்டியே இறக்குமதி செய்து வைத்திருந்தனர். நெல் விதைகளுக்கு மானியம் வராததால் நெல் விதைகள் விவசாயிகளுக்கு வழங்காமல் இருந்து வந்தது.
விவசாயிகள் ஆர்வம்
மானியம் வழங்குவதற்கான உத்தரவு வந்ததை தொடர்ந்து நேற்று முதல் விவசாயிகளுக்கு தேவையான நெல் விதைகளை வேளாண்மை விரிவாக்க மையத்தின் மூலம் வழங்கும் பணி தொடங்கப்பட்டது. அதனை தொடர்ந்து நெல் விதைகளை வாங்குவதற்கு விவசாயிகள் வேளாண்மை விரிவாக்க மையத்தில் ஆர்வமுடன் குவிந்தனர்.
அங்கு விவசாயிகள் தங்களுக்கு தேவையான நெல் விதைகளை வாங்கி டிராக்டர் மற்றும் சரக்கு வாகனங்களில் போட்டி போட்டு கொண்டு ஏற்றி சென்றனர்.