மாவட்ட வளர்ச்சி பணிகள் கண்காணிப்பு குழு கூட்டம்
சேலம் கலெக்டர் அலுவலகத்தில் மாவட்ட வளர்ச்சி பணிகள் கண்காணிப்பு குழு கூட்டம் நடந்தது. எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் கலந்து கொண்டனர்.
கண்காணிப்பு குழுக்கூட்டம்
சேலம் கலெக்டர் அலுவலகத்தில் மாவட்ட வளர்ச்சி, ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்பு குழு கூட்டம் நேற்று நடைபெற்றது. கூட்டத்துக்கு குழுத்தலைவரும், எம்.பி.யுமான எஸ்.ஆர். பார்த்திபன் தலைமை தாங்கினார். கலெக்டர் கார்மேகம் முன்னிலை வகித்தார்.
கூட்டத்தில் எஸ்.ஆர்.பார்த்திபன் எம்.பி. பேசும் போது, மாநில அரசுகளின் திட்டங்களை செயல்படுத்தும்போது அவை மக்கள் பிரதிநிதிகளால் கண்காணிப்பிற்கு உட்படுத்தப்பட்டு நிதி முறையாக சென்று சேர்வதையும், அதன் பணிகளை விரைவுபடுத்த வேண்டும் என்பதற்காகவும் 3 மாதங்களுக்கு ஒருமுறை அனைத்துத்துறை அரசு அலுவலர்களுடன் இந்த கூட்டம் நடத்தப்படுகிறது. இந்த கூட்டத்தில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித்திட்டம், ஊரக குடிநீர் இயக்கம், பாரத பிரதமர் கிராம சாலைகள் மேம்பாட்டு திட்டம் உள்ளிட்ட 37 திட்டங்கள் சார்ந்த பணிகள் ஆய்வுக்கு எடுத்துக்கொள்ளப்பட்டு, அதுதொடர்பான ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டது என்றார்.
குடிநீர் வசதி
கூட்டத்தில் கலெக்டர் கார்மேகம் பேசும் போது, பொதுமக்களின் தேவைகளை கருத்தில் கொண்டு சாலை வசதி, குடிநீர் வசதி, தெரு விளக்கு போன்ற அடிப்படை வசதிகளை உள்ளாட்சி அமைப்புகள் மூலம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில் மாவட்டத்தில் செயல்படுத்தப்பட்டு வரும் பல்வேறு திட்டங்கள் குறித்து அரசு அலுவலர்கள், மக்கள் பிரதிநிதிகள் மூலமாகவும் ஆய்வு மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. ஒவ்வொரு துறைகளிலும் செயல்படுத்தப்படும் திட்டங்களின் இலக்குகளையும் துறைத்தலைவர்கள் மேலும் விரைவாக மேற்கொள்ள இந்த அய்வு கூட்டம் உறுதுணையாக உள்ளது என்றார்.
கூட்டத்தில் எம்.எல்.ஏ.க்கள் அருள், சதாசிவம், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையின் கூடுதல் கலெக்டர் (வளர்ச்சி) பாலச்சந்தர், மாவட்ட வருவாய் அலுவலர் மேனகா, திட்ட இயக்குனர் (மகளிர் திட்டம்) பெரியசாமி மற்றும் குழுவின் உறுப்பினர்கள் தேவிகா சின்னுபிள்ளை, திருநாவுக்கரசு, மணி, பரிமளா மற்றும் உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் கலந்துகொண்டனர்.