வட்டார கல்வி அலுவலர் எழுத்து தேர்வு
நெல்லையில் வட்டார கல்வி அலுவலர் பணிக்கு எழுத்து தேர்வு நேற்று நடந்தது. இதில் 1,206 பேர் பங்கேற்றனர்.
தமிழகம் முழுவதும் நேற்று ஆசிரியர் தேர்வு வாரியம் மூலமாக வட்டார கல்வி அலுவலருக்கான எழுத்து தேர்வு நடைபெற்றது. நெல்லை மாவட்டத்தில் நெல்லை, பாளையங்கோட்டையில் இதற்காக 4 மையங்கள் அமைக்கப்பட்டு இருந்தன. தேர்வு எழுத மாவட்டத்தில் மொத்தம் 1,451 பேர் விண்ணப்பித்து இருந்தனா். இதில் நேற்று 1,206 பேர் தேர்வு எழுதினர். 245 பேர் தேர்வு எழுத வரவில்லை.
காலை 10 மணிக்கு தொடங்கி தேர்வு மதியம் 1.30 மணி வரை நடைபெற்றது. இந்த தேர்வை கண்காணிக்க மாநில அளவில் கல்வித்துறை குழுவை அமைத்துள்ளது. நெல்லை மாவட்டத்தில் கலெக்டர் கார்த்திகேயன் மற்றும் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் சின்னராசு ஆகியோர் தேர்வை ஆய்வு செய்தனர். தேர்வர்கள் செல்போன், லேப்-டாப் மற்றும் கால்குலேட்டர்கள் போன்ற உப கரணங்களை தேர்வு மையங்களின் உள்ளே கொண்டு செல்ல அனுமதி வழங்கவில்லை.
தேர்வு மையங்களில் போலீஸ் பாதுகாப்பு மற்றும் மருத்துவ குழுவினர் தயார் நிலையில் இருந்தனர். மேலும் கூடுதல் பஸ் வசதி செய்யப்பட்டிருந்தது.