கல்லூரி மாணவ-மாணவிகளுக்கு மாவட்ட அளவிலான போட்டி


கல்லூரி மாணவ-மாணவிகளுக்கு மாவட்ட அளவிலான போட்டி
x
தினத்தந்தி 3 April 2023 12:15 AM IST (Updated: 3 April 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

தமிழ் வளர்ச்சித்துறையின் சார்பில், மாவட்ட அளவில் கல்லூரி மாணவ-மாணவிகளுக்கு கவிதை, கட்டுரை மற்றும் பேச்சுப் போட்டிகள் சிவகங்கை மருதுபாண்டியர் நகரில் உள்ள சமுதாயக்கூடத்தில் வருகிற 10-ந்தேதி நடைபெறுகின்றது.

சிவகங்கை

-

தமிழ் வளர்ச்சித்துறையின் சார்பில், மாவட்ட அளவில் கல்லூரி மாணவ-மாணவிகளுக்கு கவிதை, கட்டுரை மற்றும் பேச்சுப் போட்டிகள் சிவகங்கை மருதுபாண்டியர் நகரில் உள்ள சமுதாயக்கூடத்தில் வருகிற 10-ந்தேதி நடைபெறுகின்றது.

போட்டிகள்

சிவகங்கை மாவட்ட கலெக்டர் மதுசூதன்ரெட்டி விடுத்துள்ள செய்தி குறிப்பில் கூறியுள்ளதாவது:-

கல்லூரி மாணவர்களிடையே பேச்சாற்றலையும், படைப்பாற்றலையும் வளர்க்கும் நோக்கில் மாவட்ட அளவில் கவிதை, கட்டுரை, பேச்சுப் போட்டிகள் தமிழ் வளர்ச்சித் துறையின் சார்பில் ஆண்டுதோறும் நடத்தப்பட்டு பரிசுத்தொகையும் பாராட்டுச் சான்றிதழும் வழங்கப்பட்டு வருகின்றன. இந்த ஆண்டு இப்போட்டிகள் வருகிற 10-ந்தேதி சிவகங்கை கலெக்டர் அலுவலக வளாகம், மருதுபாண்டியர் நகரில் உள்ள சமுதாயக்கூடத்தில் காலை 9.00 மணிக்கு தொடங்கி நடைபெற உள்ளன.

இப்போட்டிகளில் பங்கேற்று வெற்றி பெறும் கல்லூரி மாணவ-மாணவிகளுக்கு ஒவ்வொரு போட்டிக்கும் முதல் பரிசாக ரூ.10,000-ம், இரண்டாம் பரிசாக ரூ.7,000-ம், மூன்றாம் பரிசாக ரூ.5,000-ம் மற்றும் பாராட்டுச் சான்றிதழ் வழங்கப்பட உள்ளன. ஒவ்வொரு போட்டியிலும் முதல் பரிசு பெறும் மாணவர்கள் மாநில அளவிலான போட்டியில் கலந்து கொள்ள சிவகங்கை மாவட்டத் தமிழ் வளர்ச்சி உதவி இயக்குனரால் பரிந்துரைக்கப்படுவார்கள். சிவகங்கை மாவட்டத்தில் செயல்பட்டு வரும் அரசு மற்றும் தனியார் கல்லூரிகளில் பயிலும் மாணவ-மாணவிகள் மட்டுமே இப்போட்டிகளில் பங்கேற்கலாம்.

கலந்து கொள்ளலாம்

ஒரு கல்லூரியிலிருந்து ஒரு போட்டிக்கு 2 பேர் மட்டுமே பங்கேற்க முடியும். போட்டிகளுக்கான தலைப்புகள் போட்டிகள் தொடங்கும் முன்பு அறிவிக்கப்படும். மாவட்ட அளவிலான இப்போட்டிகளில் கலந்து கொள்ள விருப்பமுள்ள மாணவர்கள் உரிய படிவத்தைப் பூர்த்தி செய்து கல்லூரி முதல்வர் பரிந்துரையுடன், சிவகங்கை மாவட்ட தமிழ் வளர்ச்சி உதவி இயக்குனரிடம் போட்டிகள் நடைபெறும் நாளன்று நேரில் அளிக்க வேண்டும். கூடுதல் விவரங்களுக்கு சிவகங்கை கலெக்டர் அலுவலக வளாகத்தில் செயல்பட்டு வரும் தமிழ் வளர்ச்சி உதவி இயக்குனரை நேரிலோ, தொலைபேசி வாயிலாகவோ (04575-241487, 99522 80798) தொடர்பு கொள்ளலாம்.

இவ்வாறு அதில் அவர் கூறியுள்ளார்.


Next Story