மாவட்ட அளவிலான இளையோர் திருவிழா
மாவட்ட அளவிலான இளையோர் திருவிழா பெரம்பலூரில் நாளை நடக்கிறது.
இளையோர் திருவிழா
இந்திய அரசு இளையோர் நலம் மற்றும் விளையாட்டு அமைச்சகத்தின் கீழ் செயல்படும் பெரம்பலூர் மாவட்ட நேரு யுவ கேந்திரா சார்பாக மாவட்ட அளவிலான இளையோர் திருவிழா மற்றும் இந்தியா@2047 இளையோர் கலந்துரையாடல் கருத்தரங்கம் நிகழ்ச்சி நாளை (புதன்கிழமை) காலை 9 மணி முதல் பெரம்பலூர் தந்தை ஹேன்ஸ் ரோவர் கலை கல்லூரியில் நடைபெற உள்ளது.
இளையோர் திருவிழாவில் "குடிமக்களின் கடமை உணர்வு" என்ற மையக்கருத்தை வலியுறுத்தி இளையோர்களுக்கான ஓவியம், கவிதை, புகைப்படம் எடுத்தல் (செல்போனில்), கிராமிய நடனம் (குழு), இளையோர் கருத்தரங்கு கலந்துரையாடல் போட்டிகள் நடைபெற உள்ளன. பேச்சு போட்டியில் பங்கேற்கும் போட்டியாளர்கள் ஆங்கிலம் அல்லது இந்தியில் மட்டுமே பேச வேண்டும். ஓவியம், கவிதை, புகைப்படம் எடுத்தல் போட்டிகளில் வெற்றி பெறுபவர்களுக்கு முதல் பரிசாக ரூ.ஆயிரமும், 2-ம் பரிசாக ரூ.750-ம், 3-ம் பரிசாக ரூ.500-ம் மற்றும் பாராட்டு சான்றிதழ் வழங்கப்படும்.
பரிசு விவரம்
பேச்சு போட்டியில் வெற்றி பெறுபவர்களுக்கு முதல் பரிசாக ரூ.5 ஆயிரமும், 2-ம் பரிசாக ரூ.2 ஆயிரமும், 3-ம் பரிசாக ரூ.ஆயிரமும் மற்றும் பாராட்டு சான்றிதழ் வழங்கப்படும். இளையோர் கலை நிகழ்ச்சி போட்டிகளில் வெற்றி பெறுபவர்களுக்கு கிராமிய நடனம் (குழு) முதல் பரிசாக ரூ.5 ஆயிரமும், 2-ம் பரிசாக ரூ.2 ஆயிரத்து 500-ம் 3-ம் பரிசாக ரூ.ஆயிரத்து 250-ம் மற்றும் பாராட்டு சான்றிதழ் வழங்கப்படும். இளையோர் கருத்தரங்கு கலந்துரையாடலில் முதல் நான்கு இடங்கள் வெற்றி பெறும் வெற்றியாளர்களுக்கு தலா ரூ.ஆயிரத்து 500 மற்றும் பாராட்டு சான்றிதழ் வழங்கப்படும்.
நடுவர்களின் தீர்ப்பே இறுதியானது. போட்டிகளில் பங்கேற்கும் அனைவருக்கும் பங்கேற்பு சான்றிதழ் வழங்கப்படும். மாவட்ட அளவிலான ஓவியம், கவிதை, புகைப்படம் எடுத்தல் போட்டிகளில் முதல் இடத்தை பிடிப்பவர்கள் மாநில அளவிலான நடைபெற உள்ள போட்டிகளில் கலந்து கொள்ள வாய்ப்பு வழங்கப்படும். மாவட்ட அளவிலான பேச்சு போட்டியில் முதலிடம் பிடிப்பவர்கள் முறையே மாநில மற்றும் தேசிய அளவிலான நடைபெற உள்ள போட்டிகளில் பங்கேற்கலாம். போட்டிகளில் கலந்து கொள்ள விரும்பும் தகுதியுடைய இளைஞர்கள் மற்றும் இளம்பெண்கள் பெரம்பலூர் மாவட்டத்தை சார்ந்தவராகவும், வயது வரம்பு 15 முதல் 29 வரை இருக்க வேண்டும்.
பதிவு செய்ய...
மேற்கண்ட போட்டிகளில் பதிவு செய்ய மாவட்ட நேரு யுவ கேந்திரா, எண்.482, நான்கு ரோடு, துறைமங்கலம் அஞ்சல், (ஸ்ரீ ரெங்கா ஓட்டல் சந்து) பெரம்பலூர்-621220 என்ற அலுவலகத்தை அணுக வேண்டும். மேலும் விவரங்களுக்கு அலுவலகத்தை 04328-296213 என்ற தொலைபேசி எண்ணிலும், மாவட்ட இளைஞர் அலுவலரை 7810982528 என்ற செல்போன் எண்ணிலும், கணக்காளரை 9443707581 என்ற செல்போன் எண்ணிலும் தொடர்பு கொள்ளலாம் என்று பெரம்பலூர் நேரு யுவ கேந்திராவின் மாவட்ட இளைஞர் நல அலுவலர் கீர்த்தனா வெளியிட்டுள்ள ஒரு செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்.