மாவட்ட பஞ்சாயத்து தலைவர் மற்றும்யூனியன் தலைவர்களுக்கு அரசு வாகனம்


மாவட்ட  பஞ்சாயத்து தலைவர் மற்றும்யூனியன் தலைவர்களுக்கு அரசு வாகனம்
x
தினத்தந்தி 11 May 2023 12:15 AM IST (Updated: 11 May 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

மாவட்ட பஞ்சாயத்து தலைவர் மற்றும் யூனியன் தலைவர்களுக்கு அரசு வாகனத்தை அமைச்சர் கீதாஜீவன், அனிதா ராதாகிருஷ்ணன் ஆகியோர் வழங்கினர்.

தூத்துக்குடி

தூத்துக்குடியில் மாவட்ட பஞ்சாயத்து தலைவர் மற்றும் பஞ்சாயத்து யூனியன் தலைவர்களுக்கு அரசு வாகனங்களை அமைச்சர்கள் கீதாஜீவன், அனிதா ராதாகிருஷ்ணன் ஆகியோர் நேற்று வழங்கினர்.

அரசு வாகனம்

ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை சார்பில் மாவட்ட பஞ்சாயத்து தலைவர் மற்றும் பஞ்சாயத்து யூனியன் தலைவர்கள் பயன்பாட்டுக்காக ரூ.25.40 கோடி மதிப்பிலான 200 புதிய வாகனங்கள் வழங்கும் பணியை தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கடந்த சில நாட்களுக்கு முன்பு தொடங்கி வைத்தார். இதில் தூத்துக்குடி மாவட்டத்துக்கு 6 வாகனங்கள் ஒதுக்கப்பட்டன.

யூனியன் தலைவர்கள்

இந்த வாகனங்களை வழங்கும் நிகழ்ச்சி நேற்று மாலை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நடந்தது. நிகழ்ச்சிக்கு மாவட்ட கலெக்டர் செந்தில்ராஜ் தலைமை தாங்கினார். சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத் துறை அமைச்சர் பெ.கீதாஜீவன், மீன்வளம், மீனவர் நலன் மற்றும் கால்நடை பராமரிப்புத் துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் ஆகியோர் கலந்து கொண்டு வாகனங்களை வழங்கினர்.

மாவட்ட பஞ்சாயத்து தலைவருக்கு டாடா சபாரி வாகனமும், தூத்துக்குடி, ஸ்ரீவைகுண்டம், கருங்குளம், ஓட்டப்பிடாரம், புதூர் ஆகிய 5 பஞ்சாயத்து யூனியன் தலைவர்களுக்கு ஸ்கார்பியோ வாகனங்களும் வழங்கப்பட்டன. நிகழ்ச்சியில் கூடுதல் கலெக்டர் (வளர்ச்சி) தாக்கரே சுபம் ஞானதேவ் ராவ், மாவட்ட பஞ்சாயத்து தலைவர் அ.பிரம்மசக்தி மற்றும் பஞ்சாயத்து யூனியன் தலைவர்கள் கலந்து கொண்டனர்.

ஓட்டப்பிடாரம்

மேலும், ஓட்டப்பிடாரம் வடக்கு ஒன்றிய தி.மு.க. சார்பில் தமிழக அரசின் இரண்டு ஆண்டு சாதனை விளக்க பொதுக்கூட்டம் சிவன் கோவில் முன்பு நடந்தது. கூட்டத்திற்கு மாநில வர்த்தக அணி இணை செயலாளர் உமரிசங்கர் முன்னிலை வகித்தார். வடக்கு ஒன்றிய அவைத் தலைவர் சுப்பிரமணியன் வரவேற்று பேசினார். கூட்டத்தில் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்ட மீன்வளம், மீனவர் நலன் மற்றும் கால்நடை பராமரித்துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் பேசினார்்.

ெபண்களுக்கு சேமிப்பு

அப்போது அவர் பேசுகையில், தமிழகத்தில் தி.மு.க. ஆட்சிக்கு வந்தவுடன் அனைத்து ரேஷன் கார்டுகளுக்கும் ரூ.4 ஆயிரம் கொடுத்து வாக்குறுதியை நிறைவேற்றியவர் முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின். அவர், பெண்கள் மீது அக்கறை கொண்டவராக திகழ்கிறார். தமிழக முதல்-அமைச்சராக பொறுப்பேற்றவுடன் பெண்களுக்கு டவுன் பஸ்களில் இலவசமாக பயணம் செய்யலாம் என்று சட்டத்தை நிறைவேற்றிதந்தார். இதன் மூலம் மாதந்தோறும் பெண்களுக்கு ரூ.1,500 சேமிப்பை ஏற்படுத்தி தந்துள்ளார். கூட்டுறவு சங்கங்களில் விவசாய கடன், மகளிர் சுய உதவி கடன் மற்றும் நகை கடனை தள்ளுபடி செய்துள்ளார்.

பல லட்சம் மக்கள் பயன்

அரசு பள்ளிகளில் பள்ளிக்கட்டிடம் 20 ஆண்டுகளில் சேதம் அடைந்திருந்தால், அவற்றை சீரமைக்க அன்பழகன் பள்ளி மேம்பாட்டு திட்டத்தின் மூலம் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் ரூ.1,500 கோடி ஒதுக்கீடு செய்துள்ளார். மக்களை தேடி மருத்துவம் மூலம் கிராமங்களில் வீடு தேடி மருத்துவ பார்க்கும் திட்டத்தின் மூலம் மாதந்தோறும் பல லட்சம் மக்கள் பயன் அடைந்து வருகின்றனர். இன்னுயிர் காப்போம் நம்மை காப்போம் திட்ட மூலம் சாலைகளில் விபத்தில் பாதிக்கப்படும் நபர்களை அந்த வழியாக செல்பவர்கள் உடனடியாக அருகிலுள்ள ஆஸ்பத்திரியில் சேர்க்கும் பட்சத்தில் 48 மணி நேரம் சிகிச்சைக்கு அனைத்து செலவையும் அரசே ஏற்கும் திட்டம் செயல்படுத்தப் பட்டுள்ளது. மேலும், காயமடைந்தவரை ஆஸ்பத்திரியில் சேர்க்கும் நபருக்கு ரூ.5 ஆயிரம் ஊக்கத்தொகையும் அரசு வழங்கும் திட்டத்தையும் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் ெசயல்படுத்தி வருகிறார். அ.தி.மு.க. ஆட்சியாளர்கள் தமிழகத்தில் ரூ.5 லட்சம் கோடி கடன் சுமையே கொடுத்துவிட்டு சென்றனர். அந்த கடன் சுமையை சீரமைக்கும் பணிகள் நடந்து வருகிறது. மக்கள் நலனுக்கான திட்டங்களை சட்டமன்றத்தில் தீர்மானமாக நிறைவேற்றி கவர்னருக்கு அனுப்பி வைத்தால், அவர் அப்படியே வைத்துள்ளார். அப்படி ஒரு கவர்னர் நமக்கு தேவையா? என்று மக்கள் சிந்திக்கும் அளவிற்கு அவரது செயல்பாடு இருக்கிறது. சாதியையும், மதத்தையும் பிளவுபடுத்தி பார்க்கும் ஆட்சியாக மத்திய பா.ஜனதா ஆட்சி உள்ளது. வரும் நாடாளுமன்ற தேர்தலில் தமிழக மக்கள் தி.மு.க. அரசுக்கு முழு ஆதரவை தர வேண்டும், என்றார்.

கூட்டத்தில், மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் ராமஜெயம், மாவட்ட ஆதிதிராவிட அணி அமைப்பாளர் ராஜேந்திரன், தலைமை செயற்குழு உறுப்பினர் செந்தூர்மணி, மாவட்ட வழக்கறிஞர் அணி துணை அமைப்பாளர் பூங்குமார், மாவட்ட வர்த்தக அணி துணை அமைப்பாளர் முத்துக்குமார் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம்

தூத்துக்குடி தெற்கு மாவட்ட தி.மு.க. நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நேற்று காலை மாவட்ட தி.மு.க. அலுவலகத்தில் நடந்தது. கூட்டத்துக்கு மாவட்ட செயலாளரும், மீன்வளம், மீனவர் நலன் மற்றும் கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சருமான அனிதா ராதாகிருஷ்ணன் தலைமை தாங்கி பேசினார்.

அப்போது, இளைஞர் அணி சார்பில் தமிழக அரசின் இரண்டு ஆண்டு சாதனையை மக்களிடம் கொண்டு சேர்க்கும் வகையில் தெருமுனை பிரசார கூட்டங்கள் நடத்த வேண்டும் என்று முதல்-அமைச்சர் அறிவித்து உள்ளார். அதன்படி தெற்கு மாவட்டத்தில் 24 இடங்களில் தெருமுனை பிரசார கூட்டங்கள் நடக்கிறது. இளைஞர் அணியினர், அந்தந்த ஒன்றிய, நகர செயலாளர்களுடன் இணைந்து கூட்டங்களை நடத்த வேண்டும். இந்த கூட்டங்களில் தலை சிறந்த பேச்சாளர்கள் கலந்து கொண்டு பேசுகின்றனர். ஆகையால் தெருமுனை பிரசார கூட்டங்களை வெற்றிகரமாக நடத்த வேண்டும்.

இதே போன்று உறுப்பினர் சேர்க்கையை தீவிரப்படுத்த வேண்டும். உறுப்பினர் சேர்க்கையில் ஏதேனும் குறைபாடுகள் வந்தால், அதனை தெரிவித்தால், அந்த குறைகளை களைய நடவடிக்கை எடுக்கப்படும். அனைவரும் அதிக அளவில் உறுப்பினர்களை சேர்க்க வேண்டும் என்று கூறினார்.

கலந்து கொண்டவர்கள்

கூட்டத்தில் மாவட்ட இளைஞர் அணி அமைப்பாளர் ராமஜெயம், அவைத்தலைவர் அருணாசலம், இளைஞர் அணி துணை அமைப்பாளர் அம்பாசங்கர் மற்றும் ஒன்றிய, நகர செயலாளர்கள் கலந்து கொண்டனர்.


Next Story