போதையில் சிக்கிய மாணவர்களுக்கு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அறிவுரை
போதையில் சிக்கிய மாணவர்களுக்கு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஹரிகிரண் பிரசாத் அறிவுரை கூறினார். மேலும் அவர்களுக்கு கவுன்சிலிங் வழங்கும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
நாகர்கோவில்:
போதையில் சிக்கிய மாணவர்களுக்கு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஹரிகிரண் பிரசாத் அறிவுரை கூறினார். மேலும் அவர்களுக்கு கவுன்சிலிங் வழங்கும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
வீடியோ குறித்து நடவடிக்கை
குமரியில் தொடர்ந்து கஞ்சா விற்பனையில் ஈடுபடுபவர்களின் வங்கி கணக்குகள் முடக்கப்பட்டு அவர்கள் மீது குண்டர் சட்டத்தின் கீழ் போலீசார் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.
இந்த நிலையில் குமரி மாவட்டத்தில் நாகர்கோவில் புத்தேரி பகுதியில் வைத்து 5 வாலிபர்கள் சேர்ந்து போதைப் பொருட்கள் பயன்படுத்தும் வீடியோ சமூக வலைதளங்களில் பரவி பரபரப்பை ஏற்படுத்தியது. இதுதொடர்பாக மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஹரிகிரண் பிரசாத் கவனத்துக்கு சென்றது. இதையடுத்து அந்த வீடியோ குறித்து விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க போலீசாருக்கு உத்தரவிட்டார். அந்த வீடியோவில் இடம்பெற்ற 5 நபர்களில் 2 பேர் போலீசாரிடம் சிக்கினர். அவர்களில் ஒருவர் 18 வயதுடைய பிளஸ்-2 மாணவர், மற்றொருவர் 22 வயதுடைய கல்லூரி மாணவராகும். அவர்களிடம் தொடர்ந்து விசாரணை நடக்கிறது.
சூப்பிரண்டு அறிவுரை
இந்தநிலையில் நேற்று மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஹரிகிரண் பிரசாத் தன்னுடைய அலுவலகத்தில் வைத்து அந்த மாணவர்களுக்கு அறிவுரை கூறினார்.
பின்னர் அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
கூறுகையில், போதை பழக்கத்திற்கு அடிமையாகி விட்டால் வாழ்க்கையில் முன்னேற்றம் காண முடியாது. பெற்றோர்கள் தங்களது குழந்தைகளை கண்காணிக்க வேண்டும். அவர்களிடம் மனம்விட்டு பேச வேண்டும். எதிர்கால இந்தியா இளைய தலைமுறை ஆகும். எனவே அனைவரும் குடும்பம் மற்றும் கடமை பொறுப்பு உணர்ந்து செயல்பட வேண்டும். மாணவர்கள் படிப்பு விளையாட்டு உள்ளிட்டவற்றில் ஆர்வம் காட்ட வேண்டும்.
மாணவர்களுக்கு கவுன்சிலிங்
வீடியோவில் பதிவான காட்சிகளில் மேலும் சில வாலிபர்கள் இடம்பெற்றுள்ளனர். தற்போது பிடிபட்ட மாணவர்களுக்கும் நாகர்கோவிலில் உள்ள 2 சிறுவர்களுக்கான போதை தடுப்பு ஆலோசனை மையத்தில் மற்றும் பரிந்துரை மையத்தில் வைத்து கவுன்சிலிங் வழங்கப்பட்டது. போதைப் பழக்கத்தில் சிக்கிய இந்த 2 பேருக்கும் நெல்லை மற்றும் மண்டைக்காட்டில் உள்ள மது அடிமைகள் மறுவாழ்வு மையத்துக்கு அனுப்பிவைக்கப்படுவார்கள். அங்கு அவர்களுக்கு 4 நாட்கள் கவுன்சிலிங் வழங்கப்பட்டு 30 நாட்கள் போதை பழக்கத்தில் இருந்து விடுபடுவதற்கான பயிற்சி வழங்கப்படும். இதனை போலீசார் கண்காணித்து வருவார்கள். போதைப் பழக்கத்தில் இருந்து விடுபடவில்லை என்றால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்
இவ்வாறு அவர் கூறினார்.
அப்போது போதையினால் என்னென்ன தீமைகள் ஏற்படும் என்பது தொடர்பான குறும்படமும் காண்பிக்கப்பட்டது. இதில் சமூக நலத்துறை அதிகாரி சரோஜினி மற்றும் மாணவர்களின் பெற்றோர், போலீசார் உடன் இருந்தனர்.