வட்டார போக்குவரத்து அலுவலர்கள், போலீசார் கூட்டாக வாகன தணிக்கை
வட்டார போக்குவரத்து அலுவலர்கள், போலீசார் கூட்டாக வாகன தணிக்கை
தக்கலை:
வட்டார போக்குவரத்து அலுவலர்கள் மற்றும் போக்குவரத்து போலீசார் இணைந்து வட்டார போக்குவரத்து அலுவலர் சசி தலைமையில் மார்த்தாண்டம் இன்ஸ்பெக்டர் ராஜேஷ், நாகர்கோவில் இன்ஸ்பெக்டர் சக்திவேல், குளச்சல் இன்ஸ்பெக்டர் வில்லியம் ஆகியோர் நேற்று மாலை சுங்கான்கடை பகுதியில் திடீர் வாகன தணிக்கை மேற்கொண்டனர். அப்போது போக்குவரத்து விதிமுறைக்கு மாறாக மோட்டார் சைக்கிள்களை ஓட்டி வந்த 5 பேருக்கு தலா ரூ.10 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது.
மேலும் இதுபோல் போக்குவரத்து சட்டவிதிகளுக்கு மாறாக மோட்டார் சைக்கிளில் பொருத்தப்பட்டிருக்கும் சைலன்சரை மாற்றி அமைத்து பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் விதமாக வித்தியாசமான ஓசையுடன் ஓட்டினாலோ, அதிக ஓசை எழுப்பக்கூடிய ஒலிப்பான் வைத்திருந்தாலோ, ஹெல்மெட்டில் கேமரா பொருத்தி ஓட்டினாலோ இனி ரூ.10 ஆயிரம் அபராதம் விதிக்கப்படும். டிரைவர் மட்டுமல்லாது வாகனத்தில் பயணிப்பவர்களும் சீட் பெல்ட் அணியாமல் பயணித்தால் அபராதம் விதிக்கப்படும். இதற்காக மாவட்டத்தின் அனைத்து பகுதிகளிலும் போக்குவரத்து போலீசாருடன் இணைந்து வாகன தணிக்கையில் ஈடுபட உள்ளோம் என வட்டார போக்குவரத்து அலுவலர் சசி தெரிவித்துள்ளார்.