பிரிந்தவர்கள் மீண்டும் இணைந்து அ.தி.மு.க.வை பலப்படுத்த வேண்டும் ஓ.பி.ரவீந்திரநாத் எம்.பி. பேட்டி
கட்சியில் இருந்து பிரிந்து சென்ற அனைவரும் மீண்டும் இணைந்து அ.தி.மு.க.வை பலப்படுத்த வேண்டும் என்று ஓ.பி.ரவீந்திரநாத் எம்.பி. பேட்டி அளித்தார்.
முன்னாள் முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்தின் மகனும், தேனி எம்.பி.யுமான ஓ.பி.ரவீந்திரநாத் நேற்று பழனிக்கு வந்தார். அடிவாரத்தில் இருந்து ரோப்கார் மூலம் மலைக்கோவிலுக்கு சென்ற அவர், சாயரட்சை பூஜையில் கலந்துகொண்டு முருகப்பெருமானை தரிசித்து வழிபட்டார். தொடர்ந்து இரவு 7 மணிக்கு நடைபெற்ற தங்கரத புறப்பாட்டிலும் கலந்துகொண்டார். பின்னர் அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-
தமிழகத்தில் உயர்கல்வி படிக்கும் மாணவிகளுக்கு ரூ.1000 வழங்கும் அரசின் புதுமைப்பெண் திட்டத்தை வரவேற்கிறேன். அ.தி.மு.க. தொடர்பான வழக்கில் மேல்முறையீடு செய்வது பற்றி சட்ட வல்லுனர்களுடன் ஆலோசித்து முன்னாள் முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் அறிவிப்பார். தமிழகத்தில் அடுத்து நடைபெறும் தேர்தல்களில் அ.தி.மு.க. வெற்றி பெற வேண்டும் என்றால் சசிகலா, டி.டி.வி.தினகரன் உள்பட கட்சியில் இருந்து பிரிந்து சென்ற அனைவரும் மீண்டும் இணைந்து அ.தி.மு.க.வை பலப்படுத்த வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார். பேட்டியின் போது முன்னாள் எம்.எல்.ஏ. சுப்புரத்தினம் மற்றும் ஏராளமானோர் உடனிருந்தனர்.