தீபாவளி பட்டாசு வெடித்து 9 இடங்களில் தீவிபத்து; தென்னை, பனை மரங்கள் எரிந்தன
தீபாவளி பட்டாசு வெடித்து திருச்சியில் 9 இடங்களில் தீவிபத்து ஏற்பட்டது. இதில் தென்னை, பனை மரங்கள் உள்ளிட்டவைகள் எரிந்து நாசமாயின. தா.பேட்டையில் குடிசையில் தீப்பிடித்தது.
தீபாவளி பட்டாசு வெடித்து திருச்சியில் 9 இடங்களில் தீவிபத்து ஏற்பட்டது. இதில் தென்னை, பனை மரங்கள் உள்ளிட்டவைகள் எரிந்து நாசமாயின. தா.பேட்டையில் குடிசையில் தீப்பிடித்தது.
பட்டாசு வெடித்து தீவிபத்து
தீபாவளி பண்டிகையை நேற்று முன்தினம் பொதுமக்கள் பட்டாசு வெடித்து உற்சாகமாகவும், கோலாகலமாகவும் கொண்டாடினர். திருச்சி மாநகரில் தீபாவளி கொண்டாட்டத்தில் 9 இடங்களில் பட்டாசு வெடித்து தீ விபத்து ஏற்பட்டது. திருச்சி தென்னூர் பகுதியில் வீட்டுக்குள் மத்தாப்பு கொளுத்தும் போது தீப்பொறி வாஷிங் மெஷினில் விழுந்து தீப்பிடித்தது. உடனே அந்த வீட்டின் உரிமையாளர் திருச்சி தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் கொடுத்தார். தீயணைப்பு படை வீரர்கள் விரைந்து சென்று தீயை அணைத்தனர். அந்த வீட்டின் மாடியில் போடப்பட்டிருந்த ஓலைக்கூரையும் எரிந்து சேதமானது.
தென்னை, பனை மரங்கள்
மேலும் கம்பரசம்பேட்டை பகுதியில் ராக்கெட் பட்டாசு விழுந்து பனைமரம் ஒன்று தீப்பிடித்து எரிந்தது. இதனையும் தீயணைப்பு வீரர்கள் விரைந்து சென்று உடனடியாக அணைத்தனர். அது மட்டும் அல்லாமல் சுப்ரமணியபுரம், சீனிவாசநகர் திலகர்தெரு, ஸ்ரீரங்கம் பகுதியில் மங்கம்மாள் நகர், நேரு தெரு உள்ளிட்ட சில இடங்களிலும் ராக்கெட் பட்டாசினால் தீ விபத்து ஏற்பட்டு தென்னை மரங்கள் எரிந்தன. கல்லணை புத்தாபுரம் பகுதியில் பனைமரம் தீ பிடித்து எரிந்தது. இதுபற்றி தகவல் அறிந்த ஸ்ரீரங்கம் தீயணைப்பு நிலைய அலுவலர் மற்றும் தீயணைப்பு படை வீரர்கள் சம்பவ இடம் விரைந்து சென்று தீயை அணைத்து மேலும் பரவாமல் தடுத்தனர். இதேபோல் பட்டாசு வெடித்து பல இடங்களில் குழந்தைகள் மற்றும் பொதுமக்களுக்கு சிறுசிறு தீக்காயங்கள் ஏற்பட்டது. அவர்களுக்கு உடனடியாக சிகிச்சை அளிக்கும் வகையில் அரசு ஆஸ்பத்திரிகளில் ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருந்தது.
தா.பேட்டை
தா.பேட்டை தேவாங்கர் தெரு பகுதியை சேர்ந்தவர் வீரபத்திரன் (70). மாடு வியாபாரியான இவர் மனைவி மற்றும் குழந்தைகளுடன் குடிசையில் வசித்து வருகிறார். நேற்று முன்தினம் தீபாவளி பண்டிகையொட்டி அப்பகுதியில் இருந்தவர்கள் பட்டாசு வெடித்தனர். அப்போது ராக்கெட்வெடி வெடித்தபோது அதிலிருந்து வந்த தீப்பொறி குடிசையின் மீது விழுந்துள்ளதாக கூறப்படுகிறது. இதில் குடிசை தீப்பிடித்து எரிய தொடங்கியது. இதையடுத்து வீட்டில் இருந்தவர்கள் வெளியே ஓடி வந்தனர். இதை கண்ட அக்கம்பக்கத்தினர் குடிசை மீது தண்ணீர் ஊற்றி தீயை அணைக்க முயன்றனர். ஆனாலும் தீ மள, மளவென எரிய தொடங்கியது. இதுகுறித்து தகவல் அறிந்த முசிறி தீயணைப்பு மற்றும் மீட்பு நிலைய அலுவலர் முனியாண்டி தலைமையில் மீட்புபடை குழுவினர் விரைந்து வந்து தண்ணீரை பீய்ச்சி அடித்து தீயை முழுவதும் கட்டுப்படுத்தி அணைத்தனர். இதில் அந்த குடிசை முற்றிலும் எரிந்து சேதமடைந்தது. இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.