தீபாவளி பண்டிகை: சொந்த ஊர் செல்ல பஸ் நிலையத்தில் குவிந்த பொதுமக்கள்


தீபாவளி பண்டிகை: சொந்த ஊர் செல்ல பஸ் நிலையத்தில் குவிந்த பொதுமக்கள்
x
தினத்தந்தி 24 Oct 2022 12:15 AM IST (Updated: 24 Oct 2022 12:16 AM IST)
t-max-icont-min-icon

ஊட்டியில் இருந்து தீபாவளி பண்டிகைக்கு சொந்த ஊர் செல்ல ஊட்டி பஸ் நிலையத்தில் பொதுமக்கள் குவிந்தனர்.

நீலகிரி

ஊட்டி

ஊட்டியில் இருந்து தீபாவளி பண்டிகைக்கு சொந்த ஊர் செல்ல ஊட்டி பஸ் நிலையத்தில் பொதுமக்கள் குவிந்தனர்.

தொடர் விடுமுறை

தீபாவளி பண்டிகை இன்று (திங்கட்கிழமை) கோலாகலமாக கொண்டாடப்பட உள்ளது. இதைத் தொடர்ந்து இன்று நீலகிரி மாவட்டம் ஊட்டியில் இருந்து வெளி மாவட்டங்கள் மற்றும் மாநிலங்களுக்கு செல்ல பஸ் நிலையத்தில் பொதுமக்கள் நேற்று மாலை வந்தனர். மேலும் சனி, ஞாயிறு வார விடுமுறை மற்றும் தீபாவளி விடுமுறை என 3 நாட்கள் தொடர் விடுமுறை காரணமாக வெளி மாநிலங்கள் மற்றும் மாவட்டங்களில் இருந்து ஓரளவு சுற்றுலா பயணிகளும் குடும்பத்துடன் நீலகிரிக்கு வந்தனர். இதேபோல் வெளியூர்களில் பணியாற்றும் நீலகிரி மாவட்டத்தை சேர்ந்தவர்களும் சொந்த ஊர் வந்தனர். இதனால் நேற்று மாலை நீலகிரி பஸ் நிலையத்தில் பொதுமக்கள் கூட்டம் அதிகமாக இருந்தது. ஆனால் பொதுமக்கள் கூட்டத்திற்கு ஏற்ப கூடுதல் பஸ்கள் இல்லாததால் அவர்கள் கடும் அவதிப்பட்டனர்.

170 பஸ்கள்

இதன்படி நீலகிரி மாவட்டத்தில் இருந்து கேரளா, கர்நாடகா போன்ற வெளி மாநிலங்கள் மற்றும் தமிழகத்தின் வெளி மாவட்டங்கள் மற்றும் நீலகிரி மாவட்டம் என 170 வழித்தடங்களில் 320 பஸ்கள் இயக்கப்படுகின்றன. இதில் ஊட்டி கிளையில் இருந்து மட்டும் 170 பஸ்கள் இயக்கப்படுகின்றன.

இந்த நிலையில் நேற்று தொடர் விடுமுறை முடிந்து சொந்த ஊர் செல்லும் சுற்றுலா பயணிகள் மற்றும் வேலைக்கு செல்லும் பொதுமக்கள் கூட்டம் காரணமாக ஊட்டி பஸ் நிலையத்தில் பொதுமக்கள் கூட்டம் அலைமோதியது. இதற்காக 10-க்கும் மேற்பட்ட கூடுதல் பஸ்கள் இயக்கப்படும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் கூடுதல் பஸ்கள் இயக்காததால் அவர்கள் நீண்ட நேரம் பஸ் நிலையத்தில் காத்திருந்தனர். மேலும் ஒரு சில பஸ்கள் வந்த போது வேகமாக முண்டியடித்து ஓடி சென்று பஸ்சில் ஏறி இடம் பிடித்தனர். குறிப்பாக, கோவைக்கு செல்ல குறிப்பிட்ட நேரத்திற்கு பஸ் இல்லாததால் பயணிகள் கடும் அவதியடைந்தனர். வாலிபர்கள் வேகமாக சென்று இடம் பிடித்ததால் முதியோர்கள் மற்றும் பெண்கள் சிரமத்திற்கு உள்ளானார்கள்.

இதுகுறித்து பயணிகள் கூறுகையில், தொடர் விடுமுறை, பண்டிகை மற்றும் முகூர்த்த நாட்களில் இதே கதை நிலவுவதாகவும், அது மாதிரியான சமயங்களில் கூடுதல் பஸ் இயக்க நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும், அதே சமயத்தில் கூட்டம் அதிகமாக இருந்தால் அவர்கள் வரிசையாக செல்வதற்கு மாற்று ஏற்பாடாக செய்ய வேண்டும், என்றனர்.

இதேபோல் மாவட்டத்தில் நேற்று கூடலூர், கோத்தகிரி, குன்னூர் உள்ளிட்ட அனைத்து பகுதிகளிலும் பஸ்களில் இடம் கிடைக்காமல் பயணிகள் அலைமோதினர்.


Related Tags :
Next Story