தி.மு.க. நிர்வாகி உள்பட 4 பேர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது


தி.மு.க. நிர்வாகி உள்பட 4 பேர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது
x

நெல்லையில் பாரதீய ஜனதா கட்சி பிரமுகர் கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட தி.மு.க. நிர்வாகி உள்பட 4 பேர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது.

திருநெல்வேலி

நெல்லையில் பாரதீய ஜனதா கட்சி பிரமுகர் கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட தி.மு.க. நிர்வாகி உள்பட 4 பேர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது.

பா.ஜனதா பிரமுகர் கொலை

நெல்லை பாளையங்கோட்டை மூளிகுளம் பகுதியை சேர்ந்தவர் ஜெகன் (வயது 44). பாரதீய ஜனதா கட்சி இளைஞர் அணி மாவட்ட பொதுச் செயலாளராக செயல்பட்டு வந்தார். இவர் கடந்த ஆகஸ்டு மாதம் 30-ந்தேதி இரவு மூளிகுளம் பகுதியில் நின்று கொண்டிருந்த போது ஒரு கும்பலால் சரமாரியாக வெட்டி படுகொலை செய்யப்பட்டார்.

இந்த சம்பவத்தில் ஈடுபட்ட தி.மு.க. நிர்வாகியை கைது செய்ய வலியுறுத்தி உறவினர்கள் 5 நாட்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தி.மு.க. நிர்வாகி

இதுதொடர்பாக பாளையங்கோட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து 12 பேரை கைது செய்தனர். இதில் தி.மு.க. நெல்லை மாநகர துணை செயலாளர் பாலமுருகன் என்ற பிரபு (வயது 46) என்பவரும் கைது செய்யப்பட்டு, பாளையங்கோட்டை மத்திய சிறையில் அடைக்கப்பட்டு உள்ளார்.

இந்த வழக்கில் கைதாகி இருக்கும் 4 பேர் மீது குண்டர் சட்டத்தின் கீழ் போலீசார் நடவடிக்கை எடுத்துள்ளனர். அதாவது பாளையங்கோட்டை சேர்ந்த விக்னேஷ்வர் என்ற விக்கி (27), அஜித்குமார் (24), பரமராஜ் (29) மற்றும் பாலமுருகன் என்ற பிரபு ஆகியோரை குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்ய நெல்லை மாநகர கிழக்கு பகுதி துணை கமிஷனர் ஆதர்ஷ் பசேரா, மேலப்பாளையம் உதவி கமிஷனர் சதீஷ்குமார் ஆகியோர் பரிந்துரை செய்தனர்.

குண்டர் சட்டம் பாய்ந்தது

நெல்லை சரக போலீஸ் டி.ஐ.ஜி.யும், மாநகர போலீஸ் கமிஷனருமான (கூடுதல் முழு பொறுப்பு) பிரவேஷ் குமார் இந்த பரிந்துரையை ஏற்று விக்கி, அஜித்குமார், பரமராஜ், பிரபு ஆகிய 4 பேரையும் குண்டர் தடுப்பு காவல் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்க உத்தரவிட்டார்.

இந்த உத்தரவு நகலை போலீசார் நேற்று பாளையங்கோட்டை மத்திய சிறையில் சமர்ப்பித்தனர்.


Next Story