தி.மு.க.வில் இருக்கிறேன்; பா.ஜ.க.வில் சேருவேன் என்பது வதந்தி- முன்னாள் அமைச்சர் தோப்பு வெங்கடாசலம் பேட்டி
தி.மு.க.வில் இருக்கிறேன். பா.ஜ.க.வில் சேருவேன் என்பது வதந்தி என்று முன்னாள் அமைச்சர் தோப்பு வெங்கடாசலம் கூறினார்.
தி.மு.க.வில் இருக்கிறேன். பா.ஜ.க.வில் சேருவேன் என்பது வதந்தி என்று முன்னாள் அமைச்சர் தோப்பு வெங்கடாசலம் கூறினார்.
தோப்பு வெங்கடாசலம்
ஈரோடு மாவட்டம் பெருந்துறை தொகுதியில் 2 முறை அ.தி.மு.க. எம்.எல்.ஏ.வாகவும், மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதாவின் தலைமையிலான அமைச்சரவையில் தமிழக வருவாய்த்துறை அமைச்சர், சுற்றுச்சூழல் துறை அமைச்சராக பதவிகள் வகித்தவர் தோப்பு வெங்கடாசலம். மேலும் அ.தி.மு.க.வின் ஈரோடு வடக்கு மாவட்ட செயலாளராகவும் செயல்பட்டார்.
கடந்த சட்டமன்ற தேர்தலில் பெருந்துறை தொகுதியில் அ.தி.மு.க. சார்பில் போட்டியிட அவருக்கு வாய்ப்பு வழங்கப்படவில்லை. எனவே சுயேச்சையாக களம் இறங்கிய அவர் 10 ஆயிரம் வாக்குகளுக்கு மேல் பெற்றார். பின்னர் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் தி.மு.க.வில் இணைந்தார்.
தனிப்பட்ட அன்பு
தொடர்ந்து தி.மு.க. நிகழ்ச்சிகளில் பங்கு பெற்று வருகிறார். இந்தநிலையில் தி.மு.க.வில் அவருக்கு உரிய பதவிகள் ஏதும் வழங்கப்படாததால் பா.ஜ.வில் இணையப்போவதாக தகவல்கள் வெளியாகின.
இந்தநிலையில் நேற்று பெருந்துறையில் செய்தியாளர்களை சந்தித்து முன்னாள் அமைச்சர் தோப்பு வெங்கடாசலம் மீண்டும் விளக்கம் அளித்தார்.
இதுபற்றி 'தினத்தந்தி' நிருபரிடம் அவர் கூறியதாவது:-
அ.தி.மு.க.வில் இருந்து வந்ததால் பா.ஜனதாவுக்கு சென்று விடுவேன் என்று யாரும் நினைக்க வேண்டாம். தி.மு.க.வில் என்னை நல்ல மரியாதையுடன் நடத்துகிறார்கள். முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் என்மீது தனிப்பட்ட முறையில் அன்பு வைத்து இருக்கிறார். எனவே நான் தி.மு.க.வை விட்டு எங்கும் செல்லும் எண்ணம் இல்லை. அப்படிபோகவும் மாட்டேன்.
திட்டங்கள்
நான் பா.ஜனதாவில் சேரப்போகிறேன் என்று சிலர் வேண்டுமென்றே திட்டமிட்டு சமூக வலைதளங்களில் பரப்பி வருகிறார்கள். அது முற்றிலும் வதந்தியாகும். நான் பதவியில் இருந்தபோது அத்திக்கடவு-அவினாசி திட்டத்தை கொண்டு வர தொடர்ந்து முயற்சித்து அதை செயல்படுத்த வைத்தேன். கொடிவேரி-பெருந்துறை கூட்டுக்குடிநீர் திட்டத்தை கொண்டு வந்தேன். மக்களுக்காக தொடர்ந்து நான் போராடி இந்த திட்டங்களை கொண்டு வந்தேன்.
பெரிய பதவி
மக்களுக்கான திட்டங்களை தி.மு.க. அரசு நிறைவேற்றி வருகிறது. ஆளும் கட்சியில் நான் இருப்பதன் மூலம் மக்கள் நலத்திட்டங்களை நிறைவேற்ற முடியும் என்பது எனது ஆசை. மக்கள் பணியை தொடர்ந்து செய்வதே என் நோக்கம். எனவே பதவி வேண்டும் என்று எந்த கோரிக்கையும் வைக்கவில்லை. எனக்கு எப்படிப்பட்ட பதவி தரவேண்டும். எந்த நேரத்தில் தர வேண்டும் என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு தெரியும். அவர் மனதில் இடம் பெற்று இருப்பதே பெரிய பதவியாகும்.
இவ்வாறு முன்னாள் அமைச்சர் தோப்பு வெங்கடாசலம் கூறினார்.