திருமகன் ஈவெரா கேட்டுப்பெற்ற ரூ.400 கோடிக்கான திட்டங்கள் நிறைவேற ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் வெற்றி பெறவேண்டும்- அமைச்சர் எ.வ.வேலு பேச்சு
மறைந்த எம்.எல்.ஏ. திருமகன் ஈவெரா கேட்டுப்பெற்ற ரூ.400 கோடிக்கான திட்டங்கள் ஈரோடு கிழக்கு தொகுதியில் நிறைவேற ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் வெற்றி பெற வேண்டும் என்று பிரசாரத்தின் போது அமைச்சர் எ.வ.வேலு கூறினார்.
மறைந்த எம்.எல்.ஏ. திருமகன் ஈவெரா கேட்டுப்பெற்ற ரூ.400 கோடிக்கான திட்டங்கள் ஈரோடு கிழக்கு தொகுதியில் நிறைவேற ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் வெற்றி பெற வேண்டும் என்று பிரசாரத்தின் போது அமைச்சர் எ.வ.வேலு கூறினார்.
வாக்கு சேகரிப்பு
ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் தி.மு.க. கூட்டணியில் காங்கிரஸ் வேட்பாளராக கட்சியின் மூத்த தலைவர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் போட்டியிடுகிறார்.
அவருக்கு கை சின்னத்தில் வாக்கு சேகரிக்கும் பணியில் தி.மு.க. கூட்டணி கட்சியினர் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார்கள்.
ரூ.400 கோடி
அதன்படி நேற்று ஈரோடு நாராயணவலசு அருகே வாக்குச்சாவடி தேர்தல் அலுவலகத்தை திறந்து வைத்து அமைச்சர் எ.வ.வேலு பொதுமக்கள் மத்தியில் பேசியதாவது:-
ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதியில் 5 ஆண்டுகள் பணியாற்ற, ஏற்கனவே தொகுதி மக்களாகிய நீங்கள் திருமகன் ஈவெராவை தேர்ந்து எடுத்தீர்கள். 5 ஆண்டுகள் மக்கள் பணியாற்ற வேண்டிய அவர், நம்மை எல்லாம் மீளாத்துயரில் ஆழ்த்தி மறைந்து விட்டார். 1½ ஆண்டு காலத்தில், நமது அமைச்சர் முத்துசாமியுடன் இணைந்து தொகுதி மக்களுக்காக பல்வேறு பணிகளை செய்தார். குறிப்பாக ஈரோடு கிழக்கு தொகுதியின் வளர்ச்சிக்காக பல்வேறு வகையான திட்டங்களை தீட்டி, மக்களின் தேவைகளை பூர்த்தி செய்ய திருமகன் ஈவெரா முதல்-அமைச்சரிடம் கோரிக்கைகள் விடுத்து இருந்தார். அதன்பேரில், சுமார் ரூ.400 கோடியை கிழக்கு சட்டமன்ற தொகுதிக்காக முதல்-அமைச்சர் ஒதுக்கி இருந்தார். இப்போது எம்.எல்.ஏ. திருமகன் ஈவெரா மறைந்த நிலையில் இடைத்தேர்தல் நடக்க இருக்கிறது. இது பொதுத்தேர்தல் இல்லை. ஆளும் கட்சி மற்றும் ஆளும் அரசுக்கு ஆதரவான கட்சி வெற்றி பெற்றால்தான் திட்டங்களை நிறைவேற்ற முடியும்.
வளர்ச்சிப்பணிகள்
அமைச்சர் சு.முத்துசாமியுடன் இணைந்து வளர்ச்சித்திட்டங்களை நிறைவேற்ற ஒத்துழைப்பவர்களால்தான் வளர்ச்சி திட்டங்கள் நிறைவேறும். மாற்றுக்கருத்தாக எதிர்க்கட்சி வேட்பாளர் வெற்றி பெற்றால், அவர் அமைச்சரோடு இணைந்து செயல்படமாட்டார். மக்களின் தேவைகளை முதல்-அமைச்சரிடம் சென்று கேட்கமாட்டார்.
எனவே இந்த பகுதி, ஈரோடு மாநகராட்சி வளர்ச்சி அடைய தி.மு.க. கூட்டணியில் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் போட்டியிடுகிறார். அவர் வெற்றி பெற வேண்டும். அப்போதுதான் ரூ.400 கோடிக்கான வளர்ச்சிப்பணிகள் நடைபெறும்.
தாய்மார்களின் ஆட்சி
இப்போது பெண்கள்தான் முடிவு எடுக்கும் இடத்தில் இருக்கிறார்கள். முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினின் ஆட்சி தாய்மார்களுக்கான ஆட்சி. டவுன் பஸ் பயணத்துக்கு பெண்கள் டிக்கெட் எடுக்க வேண்டியது இல்லை. ஆட்சிக்கு வந்த உடன் ரேஷன் கடைகள் மூலம் குடும்ப அட்டை தாரர்களுக்கு ரூ.4 ஆயிரம் வழங்கினார். பொங்கல் பண்டிகைக்கு 2 கோடியே 10 லட்சம் குடும்ப அட்டைதாரர்களுக்கு தலா ரூ.1000 வழங்கியவர். மகளிர் குழு கடன்களை ரத்து செய்தவர் என்று தாய்மார்களுக்கான ஆட்சி நடக்கிறது. எனவே கூடிஇருக்கும் தாய்மார்கள், இங்கு வராதவர்களிடமும் இந்த ஆட்சியின் தேவையை எடுத்துக்கூறி ஈ.வி.கே.எஸ்.இளங்கோவனுக்கு கை சின்னத்தில் வாக்கு சேகரிக்க வேண்டும்.
இவ்வாறு அமைச்சர் எ.வ.வேலு பேசினார்.
அவருடன் அமைச்சர் சு.முத்துசாமி, துணை சபாநாயகர் பிச்சாண்டி மற்றும் நிர்வாகிகள் உடன் இருந்தனர்.