தி.மு.க. ஆட்சி பழங்குடியின மக்களுக்கு பொற்காலம் அமைச்சர் மனோ தங்கராஜ் பேச்சு


தி.மு.க. ஆட்சி பழங்குடியின மக்களுக்கு பொற்காலம் அமைச்சர் மனோ தங்கராஜ் பேச்சு
x

தி.மு.க. ஆட்சிக்காலம் பழங்குடி மக்களுக்கு பொற்காலமாக இருக்கும் என்று பேச்சிப்பாறையில் நடந்த உலக பழங்குடிகள் தின விழாவில் அமைச்சர் மனோ தங்கராஜ் பேசினார்.

கன்னியாகுமரி

குலசேகரம்:

தி.மு.க. ஆட்சிக்காலம் பழங்குடி மக்களுக்கு பொற்காலமாக இருக்கும் என்று பேச்சிப்பாறையில் நடந்த உலக பழங்குடிகள் தின விழாவில் அமைச்சர் மனோ தங்கராஜ் பேசினார்.

பழங்குடிகள் தினவிழா

குமரி மாவட்ட நிர்வாகம் மற்றும் காணி பழங்குடி மக்கள் சார்பில் உலக பழங்குடிகள் தினவிழா பேச்சிப்பாறையில் நடந்தது. மாவட்ட கலெக்டர் அரவிந்த் தலைமை தாங்கினார். அமைச்சர் மனோ தங்கராஜ் கலந்து கொண்டு காணிப் பழங்குடியின மக்களுக்கு நில உரிமை பட்டா மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கி பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-

காணி பழங்குடியின மக்கள் மத்தியில் பிரிவினை கூடாது. நீங்கள் காடுகளில் இயற்கை சூழலில் வாழ்வது குறித்து பெருமை பட வேண்டும். தி.மு.க. அரசு பழங்குடியின மக்களுக்கு நிலத்தையும், மரத்தையும் தருகின்ற அரசாக உள்ளது. இந்த 5 ஆண்டு காலம் காணி பழங்குடியின மக்களுக்கு ஒரு பொற்காலமாக இருக்கும்.

பசுமை மாவட்டமாக மாற்ற...

குமரி மாவட்டத்தை பசுமை மாவட்டமாக மாற்ற முயற்சி எடுத்துக் கொண்டிருக்கிறோம். குமரி மாவட்டத்தில் பழங்குடியின மக்களின் சிறு தெய்வ வழிபாடுகள் நடக்கும் 35 கோவில்களை மேம்படுத்தும் வகையில் ஒரு கோவிலுக்கு ரூ.2 லட்சம் வீதம் வழங்க உள்ளோம்.

இவ்வாறு அவர் பேசினார்.

தொடர்ந்து பத்மநாபபுரம் சப்-கலெக்டர் அலர்மேல் மங்கை, ஜெய்பீம் திரைப்பட இயக்குனர் ஞானவேல், பழங்குடியினர் பண்பாட்டு ஆராய்ச்சி நிறுவன இயக்குனர் சுரேஷ் சுவாமியார் காணி, மாவட்ட வன அலுவலர் இளையராஜா உள்பட பலர் பேசினர்.

நிகழ்ச்சியில், உதவி வனப்பாதுகாவலர் சிவகுமார், உதவி வனப் பாதுகாவலர் பயிற்சி மனாசிர் ஹலிமா, திருவட்டார் தாசில்தார் சதீஷ் சந்திரன், ஆதிதிராவிடர் நலத்துறை சிறப்பு தாசில்தார் கோலப்பன், தோட்டக் கலைத்துறை அலுவலர் ஷீலா ஜாண், செய்தி மற்றும் மக்கள் தொடர்பு துறை அலுவலர் ஜாண் ஜெகத் பிரைட், தி.மு.க. திருவட்டார் வடக்கு ஒன்றியச் செயலாளர் ஜாண்சன், பேரூர் செயலாளர்கள் ஜெபித் ஜாஸ், சேம்பென்ட் சதீஸ், விவசாய தொழிலாளர் அணி அமைப்பாளர் அலாவுதீன், கலை இலக்கிய பகுத்தறிவு அணி அமைப்பாளர் ஜெஸ்டின் பால்ராஜ், வர்த்தகர் அணி துணை அமைப்பாளர் ராஜா, தகவல் தொழில் நுட்ப அணி அமைப்பாளர் பெர்ஜின், ஒன்றிய துணைச் செயலாளர் டெய்சி ஏசுதாஸ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

கலை நிகழ்ச்சிகள்

நிகழ்ச்சியில் பழங்குடியின மக்களின் நாடகம், நடனம் உள்பட பல்வேறு கலை நிகழ்ச்சிகள் நடந்தது.

முன்னதாக ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலர் நாகராஜன் வரவேற்று பேசினார். முடிவில் கடையல் பேரூராட்சி கவுன்சிலர் ராஜேந்திரன் நன்றி கூறினார்.


Next Story