தி.மு.க. அரசை கண்டித்து அ.தி.மு.க. கவுன்சிலர்கள் வெளிநடப்பு


தி.மு.க. அரசை கண்டித்து அ.தி.மு.க. கவுன்சிலர்கள் வெளிநடப்பு
x

தா.பழூர் ஒன்றியக்குழு கூட்டத்தில் தி.மு.க. அரசை கண்டித்து அ.தி.மு.க. கவுன்சிலர்கள் வெளிநடப்பு செய்தனர்.

அரியலூர்

அரியலூர் மாவட்டம் தா.பழூர் ஊராட்சி ஒன்றிய அலுவலக வளாகத்தில் உள்ள கூட்ட மன்ற அரங்கில் ஒன்றியக்குழு கூட்டம் நடைபெற்றது. ஒன்றியக்குழு தலைவர் மகாலட்சுமி வீர மணிகண்டன் தலைமை தாங்கினார். துணை தலைவர் கண்ணன் முன்னிலை வகித்தார். துணை வட்டார வளர்ச்சி அலுவலர் நிர்வாகம் பாக்கியராஜ் வரவேற்று பேசினார். வட்டார வளர்ச்சி அலுவலர் வட்டார ஊராட்சி அமிர்தலிங்கம், கிராம ஊராட்சிகள் நாராயணன் ஆகியோர் பல்வேறு திட்டங்கள் குறித்து எடுத்துக்கூறினர். கூட்டத்தில் அ.தி.மு.க.திமுக உள்ளிட்ட ஒன்றியக்குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டு பல்வேறு வளர்ச்சி திட்டங்கள் குறித்து பேசினர். அப்போது அ.தி.மு.க. ஒன்றிய குழு உறுப்பினர் அசோகன் பேசுகையில்:- தி.மு.க. கூட்டணியில் அங்கம் வகிக்கும் காங்கிரஸ் கட்சி ஆளும் கர்நாடக அரசிடம் இருந்து தமிழகத்திற்கு உரிய நேரத்தில் தரவேண்டிய காவிரி நீரை தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பெற்றுத்தரவில்லை. இதன் காரணமாக காவிரி டெல்டா பாசன பகுதியில் பல்லாயிரக்கணக்கான சம்பா நெற்பயிர்கள் இதனால் பாதிக்கப்பட்டுள்ளது. அரியலூர் மாவட்டத்தில் தா.பழூர் வட்டாரத்தில் விவசாயம் முற்றிலும் பாதிப்படைந்துள்ளது. தமிழகத்திற்கு காவிரி நீரை உரிய முறையில் பெற்றுத்தராத தி.மு.க. அரசை கண்டித்து அ.தி.மு.க. ஒன்றியக்குழு உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்கிறோம் எனக் கூறி அ.தி.மு.க.வை சேர்ந்த 6 ஒன்றியக்குழு கூட்டத்தை புறக்கணித்து வெளிநடப்பு செய்தனர். இதன் காரணமாக ஊராட்சி ஒன்றிய அலுவலக வளாகத்தில் பரபரப்பு ஏற்பட்டது. கூட்டத்தில் கணக்கர் அரிய தங்கம் தீர்மானங்களை வாசித்தார். ஒன்றிய பொறியாளர் காமராஜ், ரேவதி, பணி மேற்பார்வையாளர்கள் சண்முகம், நிர்மல் குமார் உள்ளிட்ட அதிகாரிகள் கலந்து கொண்டனர். முடிவில் துணை வட்டார வளர்ச்சி அலுவலர் ராதிகா நன்றி தெரிவித்து பேசினார்.


Next Story