பேரூராட்சி கூட்டத்தை தி.மு.க., அ.தி.மு.க. உறுப்பினர்கள் புறக்கணிப்பு


பேரூராட்சி கூட்டத்தை தி.மு.க., அ.தி.மு.க. உறுப்பினர்கள் புறக்கணிப்பு
x

ஆலங்காயம் பேரூராட்சி நிர்வாகத்தில் தலைவரின் மகன் தலையிடுவதாகக்கூறி தி.மு.க., அ.தி.மு.க. உறுப்பினர்கள் பேரூராட்சி கூட்டத்தை புறக்கணித்தனர். இதனால் கூட்டம் ஒத்திவைக்கப்பட்டது.

திருப்பத்தூர்

ஆலங்காயம் பேரூராட்சி நிர்வாகத்தில் தலைவரின் மகன் தலையிடுவதாகக்கூறி தி.மு.க., அ.தி.மு.க. உறுப்பினர்கள் பேரூராட்சி கூட்டத்தை புறக்கணித்தனர். இதனால் கூட்டம் ஒத்திவைக்கப்பட்டது.

தலைவரின் மகன் தலையீடு

திருப்பத்தூர் மாவட்டம், ஆலங்காயம் சிறப்புநிலை பேரூராட்சி கூட்டம் காலை 10 மணிக்கு, பேரூராட்சி மன்ற தலைவர் தமிழரசி வெங்கடேசன் (தி.மு.க.) தலைமையில் நடைபெற இருந்தது. இந்த நிலையில பேரூராட்சி தலைவர் தமிழரசி வெங்கடேசனின் மகன் கணேஷ்பாபு என்பவர் பேரூராட்சி நிர்வாகத்தில் தலையிட்டு பேரூராட்சி மன்ற உறுப்பினர், பேரூராட்சி ஊழியர்களை பணி செய்யவிடாமல் தடுப்பதாகவும், பேரூராட்சி ஊழியர்களை மிரட்டுவதாகவும் கூறப்படுகிறது.

இதுகுறித்து பலமுறை பேரூராட்சி தலைவரிடம், மன்ற உறுப்பினர்கள் முறையிட்டும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை என்றும் கூறப்படுகிறது.

கூட்டத்தை புறக்கணிப்பு

இதை கண்டித்து ஆலங்காயம் பேரூராட்சி மன்ற தி.மு.க., அ.தி.மு.க. உறுப்பினர்கள் அனைவரும் நேற்று நடைபெற இருந்த கூட்டத்தில் கலந்து கொள்ளாமல் புறக்கணித்தனர். ஆலங்காயம் பேரூராட்சியில் தி.மு.க.- 12, அ.தி.மு.க.- 2, சுயேச்சை- 1 என மொத்தம் 15 உறுப்பினர்கள் உள்ளனர். நேற்று நடைபெற இருந்த கூட்டத்தை தி.மு.க. உறுப்பினர்கள் 11 பேரும், அ.தி.மு.க. உறுப்பினர்கள் 2 பேரும் ஒட்டுமொத்தமாக புறக்கணிதனர்.

இதனால் கோரம் இல்லாமல் கூட்டம் ஒத்திவைக்கப்பட்டது. தி.மு.க.வைச் சேர்ந்த பேரூராட்சி தலைவரை கண்டித்து அந்த கட்சி உறுப்பினர்களே திடீர் புறக்கணிப்பு செய்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.


Next Story