பேரூராட்சி கூட்டத்தில் தி.மு.க., அ.தி.மு.க. உறுப்பினர்களிடையே கடும் வாக்குவாதம்
உதயேந்திரம் பேரூராட்சி கூட்டத்தில் தி.மு.க., அ.தி.மு.க. உறுப்பினர்களிடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. நாற்காலியையும் உடைத்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
உதயேந்திரம் பேரூராட்சி கூட்டத்தில் தி.மு.க., அ.தி.மு.க. உறுப்பினர்களிடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. நாற்காலியையும் உடைத்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
பேரூராட்சி கூட்டம்
திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடியை அடுத்த உதயேந்திரம் பேரூராட்சி கூட்டம் மன்ற அரங்கில் நேற்று நடைபெற்றது. கூட்டத்திற்கு பேரூராட்சி தலைவர் பூசாராணி தலைமை வகித்தார். துணைத் தலைவர் கோவிந்தராஜ் முன்னிலை வகித்தார். செயல் அலுவலர் ரேவதி வரவேற்றார். கூட்டத்தில் சிறப்பு அழைப்பாளராக வாணியம்பாடி தொகுதி எம்.எல்.ஏ. கோ.செந்தில்குமார் கலந்து கொண்டார்.
தி.மு.க.வை சேர்ந்த 8 உறுப்பினர்கள், அ.தி.மு.க.வை சேர்ந்த 6 உறுப்பினர்கள் மற்றும் சுயேச்சை ஒருவர் என மொத்தம் 15 உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். கூட்டத்தில் தீர்மானங்கள் ஒன்றன்பின் ஒன்றாக வாசிக்கப்பட்டது. அப்போது 2-வது மற்றும் 3-வது வார்டு பகுதியில் புதிதாக வீட்டு மனைகள் அமைப்பதற்கு ஒப்புதல் வழங்குவது தொடர்பான தீர்மானம் வாசிக்கப்பட்டது.
வாக்குவாதம்
அப்போது அ.தி.மு.க. உறுப்பினர் சரவணன் வீட்டுமனை அமைந்துள்ளது, 2-வது வார்டு பகுதியா அல்லது 3-வது வார்டு பகுதியா என்பது தெளிவாக இல்லை. இதற்கு விளக்கம் அளிக்க வேண்டும் என கேட்டார்.
மேலும் மன்ற கூட்டத்தில் வெளியே பார்வையாளராக இருந்த 2- வது வார்டு உறுப்பினர் பரிமளாவின் கணவர் முருகவேல் தீர்மானம் குறித்து பேசினார். அதற்கு தி.மு.க. உறுப்பினர் ஆ.செல்வராஜ் தலைமையிலான தி.மு.க. உறுப்பினர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனையடுத்து தி.மு.க., அ.தி.மு.க. உறுப்பினர்கள் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது.
நாற்காலி உடைப்பு
அப்போது கூட்டம் முடிவடைந்ததாக அறிவிக்கப்பட்டது. இதற்கு அ.தி.மு.க. உறுப்பினர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து தீர்மான புத்தகத்தை கீழே தூக்கி எறிந்தனர். மேலும் நாற்காலியை எடுத்து வீசியதால் நாற்காலி உடைந்தது. இதனையடுத்து மன்ற கூட்டத்தில் இருந்து அனைத்து உறுப்பினர்களும் வெளியேறினர்.
பாதியிலேயே கூட்டம் முடிவடைந்ததாக அறிவித்ததை கண்டித்து பேரூராட்சி அலுவலகம் முன்பு அ.தி.மு.க.வை சேர்ந்த 6 உறுப்பினர்கள் தர்ணா போராட்டம் நடத்தினர். மேலும் மன்ற கூட்டம் முடிந்து விட்டது என தகவல் பலகையில் அறிவிப்பு ஒட்டப்பட்டது. இதனை உறுப்பினர்கள் கிழித்ததால் பரபரப்பு ஏற்பட்டது. தகவலறிந்து விரைந்து வந்த போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். தர்ணா போராட்டத்தில் ஈடுப்பட்ட உறுப்பினர்களுடன், செயல்அலுவலர் ரேவதி பேச்சுவார்த்தை நடத்தி மீண்டும் கூட்டம் ஓரிரு நாள்களில் நடத்தப்படும் என உறுதியளித்தார்.
தர்ணா
அதைத்தொடர்ந்து தர்ணா போராட்டத்தை கைவிட்டு உறுப்பினர்கள் கலைந்து சென்றனர். 4 மணி நேரம் நடைபெற்ற தர்ணா போராட்டதால் பேரூராட்சி அலுவலகம் பரபரப்பாக காணப்பட்டது.
இந்த நிலையில் பேரூராட்சி கூட்டத்தின் போது ரகளையில் ஈடுபட்டு நாற்காலியை உடைத்த நபர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என பேரூராட்சி தலைவர் பூசாராணி தலைமையில், தி.மு.க. பேரூராட்சி மன்ற உறுப்பினர்கள், செயல் அலுவலரிடம் புகார் மனு ஒன்றை அளித்துள்ளனர். இது குறித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என செயல் அலுவலர் ரேவதி அவர்களிடம் தெரிவித்துள்ளார்.