தி.மு.க., அ.தி.மு.க. தான் மொத்த ஊழலுக்கும் காரணம்


தி.மு.க., அ.தி.மு.க. தான் மொத்த ஊழலுக்கும் காரணம்
x

தி.மு.க., அ.தி.மு.க. தான் மொத்த ஊழலுக்கும் காரணம் என்று விழுப்புரம் முப்பெரும் விழாவில் பிரேமலதா விஜயகாந்த் பேசினார்.

விழுப்புரம்

விழுப்புரம்,

விழுப்புரம் மாவட்ட தே.மு.தி.க. சார்பில் விஜயகாந்த் பிறந்த நாள் விழா, தே.மு.தி.க. 18-ம் ஆண்டு தொடக்க விழா, ஏழை, எளியோர்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா ஆகிய முப்பெரும் விழா நேற்று விழுப்புரம் பழைய பஸ் நிலையம் அருகில் நடைபெற்றது.

விழாவிற்கு மாவட்ட செயலாளர் எல்.வெங்கடேசன் தலைமை தாங்கினார். நகர செயலாளர் மணிகண்டன் வரவேற்றார்.

மாநில அவைத்தலைவர் இளங்கோவன், மாநில துணை செயலாளர் பார்த்தசாரதி, கள்ளக்குறிச்சி மாவட்ட செயலாளர் கருணாகரன், மாநில விஜயகாந்த் மன்ற துணை செயலாளர் ராஜசந்திரசேகர், தொழிற்சங்க பேரவை துணை செயலாளர் சக்திவேல் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

நலத்திட்ட உதவிகள்

விழாவில் கட்சியின் பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் கலந்துகொண்டு 5 மாணவ- மாணவிகளுக்கு ரூ.1¼ லட்சத்தில் மடிக்கணினி, 1,350 பேருக்கு ரூ.3½ லட்சத்தில் வேட்டி- சேலை, 50 பேருக்கு ரூ.2½ லட்சத்தில் மருத்துவ உதவி என ஏழை, எளிய மக்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கி சிறப்புரையாற்றினார். அப்போது அவர் பேசியதாவது:-

ஏழை மக்களை வறுமையில் இருந்து மீட்டெடுக்கவே விஜயகாந்த், இந்த இயக்கத்தை நடத்தி வருகிறார். விஜயகாந்த் நன்றாக இருக்கிறார். பேசுவதிலும், நடப்பதிலும்தான் கொஞ்சம் தொய்வு. மக்களை சந்திக்க வேண்டிய நேரத்தில் நிச்சயம் சந்திக்க வருவார்.

மின் கட்டண உயர்வு

இன்றைக்கு தமிழகத்தில் மின் கட்டண உயர்வு ஒரு பக்கம், மற்றொரு பக்கம் மின்வெட்டு பிரச்சினை உள்ளது. காட்பாடியில் துரைமுருகன் பங்கேற்ற விழாவில் 3 முறை மின்சாரம் துண்டிக்கப்பட்டதால் அவர் பாதியிலேயே புறப்பட்டுவிட்டார். அதன் பிறகு 2 பொறியாளர்கள் சஸ்பெண்டு செய்யப்பட்டனர். உங்களுக்கு மின் தடை வந்தால் சஸ்பெண்டு, கோடிக்கணக்கான மக்கள், மின்சாரம் இல்லாமல் கஷ்டப்படுகிறார்கள், எத்தனை பேரை சஸ்பெண்டு செய்யப்போகிறீர்கள். தமிழகம் பல லட்சம் கோடி கடனில் உள்ளது. ஒவ்வொரு மனிதர்கள் மீதும் 900 ரூபாய் கடன் உள்ளது. தி.மு.க., அ.தி.மு.க.தான் இங்கு நடந்த மொத்த ஊழலுக்கும் காரணம்.

கடன் இல்லாத மாநிலம்

ஒவ்வொருவரின் மீதும் உள்ள கடன் சுமை பொறுப்பை இந்த இரு கட்சிகளும் ஏற்றுக்கொண்டு கடன் இல்லாத மாநிலமாக தமிழகத்தை மாற்ற வேண்டும். அப்படி உங்களால் முடியவில்லையென்றால் தே.மு.தி.க., ஒருநாள் ஆட்சிக்கு வரும். அப்போது கடன் இல்லாத தமிழகத்தை எங்களால் மாற்ற முடியும்.

இவ்வாறு அவர் பேசினார்.

விழாவில் மாவட்ட அவைத்தலைவர் கணபதி, பொருளாளர் தயாநிதி, துணை செயலாளர்கள் சுந்தரேசன், வெங்கடேசன், சூடாமணி, மாநில செயற்குழு உறுப்பினர் பாலாஜி, பொதுக்குழு உறுப்பினர்கள் முருகன், ஜெயசீலன், சந்திரதாஸ், பிரகாஷ், காணை ஒன்றிய செயலாளர்கள் கோழிப்பட்டு குமார், முருகன் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

முடிவில் மாவட்ட விஜயகாந்த் மன்ற துணை செயலாளர் ஆதவன்முத்து நன்றி கூறினார்.


Next Story