'குடும்ப தலைவிகளுக்கு ரூ.1,000 வழங்குவதாக அல்வா கொடுக்கும் தி.மு.க. அரசு'
‘குடும்ப தலைவிகளுக்கு ரூ.1,000 வழங்குவதாக கூறி தி.மு.க. அரசு அல்வா கொடுக்கிறது’ என்று திண்டுக்கல்லில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் முன்னாள் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் பேசினார்.
அ.தி.மு.க. ஆர்ப்பாட்டம்
அ.தி.மு.க. இடைக்கால பொதுச்செயலாளரும், முன்னாள் முதல்-அமைச்சருமான எடப்பாடி பழனிசாமி மீது வழக்குப்பதிவு செய்ததை கண்டித்து, திண்டுக்கல் மேற்கு மாவட்ட அ.தி.மு.க. சார்பில், திண்டுக்கல் நாகல்நகரில் ஆர்ப்பாட்டம் நடந்தது. இதில் அ.தி.மு.க. பொருளாளரும், முன்னாள் அமைச்சருமான திண்டுக்கல் சீனிவாசன் எம்.எல்.ஏ. தலைமை தாங்கி பேசியதாவது:-
தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின், முதல்-அமைச்சர் பதவி தனக்கு மட்டுமே நிரந்தரமானது என்று நினைக்கிறார். அதனால் தான் அ.தி.மு.க. இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி மீது பொய் வழக்கு போட்டுள்ளார். எடப்பாடி பழனிசாமி பயணம் செய்த விமானத்தில் திட்டமிட்டு ஒருவரை பயணிக்க வைத்து அவதூறாக பேச வைத்து வம்பு இழுக்கின்றனர்.
அதோடு புகார் அளித்த எடப்பாடி பழனிசாமி மீது 7 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்துள்ளனர். புகார் அளித்தவர் மீதே வழக்கு என்றால், நாடு எங்கே சென்று கொண்டிருக்கிறது. இந்த வழக்கு மூலம் ஜாமீன் கேட்டு நீதிமன்றத்துக்கு அலைய வைக்கும் கேவலமான அரசியலை மு.க.ஸ்டாலின் செய்து வருகிறார்.
தப்பு கணக்கு
அ.தி.மு.க.வை போலீசை வைத்து மிரட்டி விடலாம் என்று மு.க.ஸ்டாலின் தப்புகணக்கு போடுகிறார். அது ஒரு போதும் நடக்காது. கருணாநிதி முதல்-அமைச்சராக இருந்த போது ஜெயலலிதா மீது எத்தனையோ பொய் வழக்கு பதிவு செய்தார். அத்தனையும் உடைத்து எறிந்து ஜெயலலிதா சாதித்தார்.
ஜெயலலிதாவுக்கு பின்னர் அ.தி.மு.க.வுக்கு திறமையான தலைவராக எடப்பாடி பழனிசாமி கிடைத்துள்ளார். இதனால் தான் சட்டமன்ற தேர்தலில் 75 எம்.எல்.ஏ.க்கள் கிடைத்தனர். பல்வேறு தொகுதிகளில் மிக குறைந்த வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி வாய்ப்பு நழுவியது. ஒரு விபத்தின் மூலம் மு.க.ஸ்டாலின் முதல்-அமைச்சராகி விட்டார். அதையே நிரந்தரம் என்று நினைக்கிறார்.
பனங்காட்டு நரிகள்
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் பணத்தை கொடுத்து வாக்குகளை விலைக்கு வாங்கி வெற்றி பெற்றனர். ஒரு வாக்குக்கு தி.மு.க.வினர் ரூ.25 ஆயிரம் கொடுத்தும், 45 ஆயிரம் பேர் அ.தி.மு.க.வுக்கு வாக்களித்து உள்ளனர். அ.தி.மு.க.வினர் பனங்காட்டு நரிகள், எந்த சலசலப்புக்கும் அஞ்ச மாட்டோம். 50 ஆண்டுகளுக்கு முன்பே இடைத்தேர்தலில் தி.மு.க.வினரின் அராஜகத்தை முறியடித்து, எம்.ஜி.ஆருக்கு வெற்றியை கொடுத்த மண் திண்டுக்கல்.
எடப்பாடி பழனிசாமி மீது பொய் வழக்கு பதிவு செய்த தி.மு.க.வினர் திருந்த வேண்டும், இல்லாவிட்டால் திருத்தப்படுவீர்கள். அ.தி.மு.க.வினர் நினைத்தால் விளைவுகள் தாறுமாறாக ஆகிவிடும். அரிச்சந்திரனின் மைத்துனரை போன்று தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றி விட்டதாக கூறுகின்றனர்.
குடும்ப தலைவிகளுக்கு ரூ.1,000 வழங்க கணக்கெடுப்பு நடத்தப்படுகிறது. குடும்ப தலைவருக்கு ரூ.15 ஆயிரம் வருமானம் இருந்தால் உதவித்தொகை கிடையாது. அதேபோல் முதியோர் ஓய்வூதியம் வாங்கினால் ரூ.1,000 உதவித்தொகை கிடையாது என்கின்றனர். எனவே யாருக்கும் உதவித்தொகை கிடைக்காது.
அல்வா-நாமம்
அரசியல் ஆண்மை இருந்தால் தேர்தல் பிரசாரத்தில் கூறியபோல் அனைத்து குடும்ப தலைவிகளுக்கும் உதவித்தொகை வழங்க வேண்டும். பெண்களுக்கு ரூ.1,000 வழங்குவதாக கூறிவிட்டு திருநெல்வேலி அல்வா கொடுத்து நாமம் போட தி.மு.க. அரசு நினைக்கிறது. நாடாளுமன்ற தேர்தலில் அ.தி.மு.க. 40 இடங்களிலும் வெற்றிபெறும். மேலும் அடுத்து சட்டமன்ற தேர்தலிலும் மக்களின் ஆதரவை பெற்று ஆட்சி அமைக்கும். அதன்பின்னர் தி.மு.க. நிறுத்திய நலத்திட்டங்களும் மீண்டும் செயல்படுத்தப்படும்.
பொய் வழக்கு போட்டு அ.தி.மு.க.வை ஒழித்து விடமுடியாது. எல்லா சூழ்நிலைகளும் மாறும். ஓடம் வண்டியிலும், வண்டி ஓடத்திலும் ஏறும் நிலை ஏற்படும். ஓய்வு எடுக்கும் சிங்கத்தை உசுப்பி விடாதீர்கள். சிங்கம் பாய்ந்தால் எப்படி இருக்கும் என்பதை தெரிந்து கொள்ளுங்கள். எடப்பாடி பழனிசாமியின் கண் இமைக்கு சிறு பிரச்சினை ஏற்பட்டாலும் விளைவுகள் கடுமையாக இருக்கும். பொதுமக்கள் அ.தி.மு.க.வுக்கு தொடர்ந்து ஆதரவை தரவேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
இதில் முன்னாள் மேயர் மருதராஜ், முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் தென்னம்பட்டி பழனிசாமி, பிரேம்குமார், பி.கே.டி. நடராஜன், பகுதி செயலாளர்கள் முரளிதரன், சுப்பிரமணி, மோகன், சேசு, மாநகராட்சி எதிர்க்கட்சி தலைவர் ராஜ்மோகன், ஒன்றிய செயலாளர் ராஜசேகரன், ஜெயலலிதா பேரவை மாவட்ட செயலாளர் பாரதி முருகன், முன்னாள் ஆவின் தலைவர் திவான்பாட்சா, கவுன்சிலர்கள் பாஸ்கரன், உமாதேவி, முன்னாள் பொதுக்குழு உறுப்பினர் நெப்போலியன் உள்பட பலர் கலந்து கொண்டனர்