தஞ்சை கலைஞர் அறிவாலயத்தில் தி.மு.க. நிர்வாகிகள் தர்ணா


தஞ்சை கலைஞர் அறிவாலயத்தில் தி.மு.க. நிர்வாகிகள் தர்ணா
x

ஒன்றிய நிர்வாகிகள் தேர்தல் தொடர்பாக மோதல் ஏற்பட்டதால் தஞ்சை கலைஞர் அறிவாலயத்தில் தி.மு.க. நிர்வாகிகள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தஞ்சாவூர்
தஞ்சை மத்திய மாவட்ட தி.மு.க.வில் ஒன்றிய நிர்வாகிகளுக்கான தேர்தல் நடந்து வருகிறது. இதற்கான வேட்புமனு தாக்கல் நிறைவடைந்த நிலையில் தஞ்சை கலைஞர் அறிவாலயத்தில் வேட்புமனு பரிசீலனை நேற்று நடைபெறுவதாக தெரிவிக்கப்பட்டது.

இந்த நிலையில் ஒன்றிய நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டதாக அறிவிக்கப்பட்டதால் ஒரு தரப்பினர் இதற்கு எதிர்ப்பு தெரிவித்தனர். இருதரப்பினரும் பேசி முடிவுகளை அறிவிக்க வேண்டும் என வலியுறுத்தினர்.

கைகலப்பு

இந்த பிரச்சினைக்கு மத்தியில் உயர்நிலை செயல்திட்டக்குழு உறுப்பினர் எஸ்.எஸ்.பழனிமாணிக்கம் எம்.பி. தஞ்சை கலைஞர் அறிவாலயத்தில் இருந்து வெளியே வந்து தனது காரில் ஏறினார். அப்போது வெளியே இருந்து சிலர் வேகமாக ஓடி வந்து அங்கிருந்த நிர்வாகி ஒருவரை சரமாரியாக தாக்கினர். இதனால் இருதரப்பினருக்கும் இடையே கைகலப்பு ஏற்பட்டது.

தர்ணா


மேலும் எம்.பி.யின் காரையும் சிலர் கைகளால் தட்டியதாக தெரிகிறது. கார் சிறிது தூரம் சென்றபிறகு எம்.பி. காரை நிறுத்த சொல்லி காரில் இருந்து இறங்குவதற்கு முயற்சி செய்தார். அப்போது நிர்வாகிகள் காரை விட்டு இறங்க வேண்டாம் என கூறி அவரை அங்கிருந்து அனுப்பி வைத்தனர்.

பின்னர் கலைஞர் அறிவாலயத்திற்குள் நிர்வாகிகள் சிலர் அமர்ந்து எம்.பி.யின் காரை கைகளால் தட்டியவர்களை கண்டித்தும், தேர்தலை முறையாக நடத்தக்கோரியும் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். இதை அறிந்த போலீசார் அங்கு விரைந்து வந்து சமரச பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.

பரபரப்பு

ஆனால் மாவட்ட நிர்வாகிகள் வந்தால்தான் நாங்கள் கலைந்து செல்வோம் என அவர்கள் கூறினர். இதனால் போலீசார் அறிவாலயத்தைவிட்டு வெளியே வந்தனர். தொடர்ந்து நிர்வாகிகள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

சுமார் 1½ மணி நேர போராட்டத்திற்கு பிறகு கலைஞர் அறிவாலயத்தை விட்டு போராட்டத்தில் ஈடுபட்ட நிர்வாகிகள் வெளியே வந்தனர். இந்த சம்பவத்தால் அங்கு பெரும் பரபரப்பு நிலவியது.



Next Story