வடலூரில் பரபரப்பு தி.மு.க. நகர செயலாளரை கொல்ல முயற்சி நண்பருக்கு அரிவாள் வெட்டு


வடலூரில் பரபரப்பு    தி.மு.க. நகர செயலாளரை கொல்ல முயற்சி    நண்பருக்கு அரிவாள் வெட்டு
x

வடலூரில் காரை வழிமறித்து தி.மு.க. நகர செயலாளரை வெட்டிக் கொல்ல முயற்சி நடந்தது. இதை தடுக்க முயன்ற அவரது நண்பரை அரிவாளால் வெட்டிவிட்டு தப்பிச் சென்ற மர்மநபர்கள் 2 பேரை போலீசார் தேடி வருகிறார்கள்.

கடலூர்


வடலூர்,

கார் கண்ணாடி உடைந்தது

கடலூர் மாவட்டம் வடலூர் பார்வதிபுரம் இந்திரா நகரை சேர்ந்தவர் தனஞ்செயன் மகன் தமிழ்செல்வன் (வயது 38). வடலூர் நகர தி.மு.க. செயலாளரான இவர், நேற்று மாலை 6 மணியளவில் வீட்டில் இருந்து, தனது காரில் வடலூருக்கு புறப்பட்டார்.

காரை அவரது நண்பரான அதேபகுதியை சேர்ந்த அருண்குமார்(39) என்பவர் ஓட்டினார். அந்த கார் வடலூர் அரசு பிற்படுத்தப்பட்ட பெண்கள் விடுதி பின்புறம் வந்தபோது, அவ்வழியாக மோட்டார் சைக்கிளில் வந்த மர்மநபர்கள் 2 பேர் திடீரென காரை வழிமறித்ததுடன் கண் இமைக்கும் நேரத்தில் காரின் முன் இருக்கையில் அமர்ந்திருந்த தமிழ்செல்வனை அரிவாளால் வெட்டி கொல்ல முயன்றனர். அப்போது கார் கண்ணாடி உடைந்து நொறுங்கியது. இந்த தாக்குதலில் தமிழ்செல்வன் அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பினார்.

நண்பருக்கு அரிவாள் வெட்டு

இந்த சம்பவத்தை கண்டு அதிர்ச்சியடைந்த அருண்குமார், தமிழ்செல்வனை அவர்களிடம் இருந்து காப்பாற்றுவதற்காக உடனே காரில் இருந்து கீழே இறங்கினார். அப்போது அந்த மர்மநபர்கள் அருண்குமாரை அரிவாளால் சரமாரியாக வெட்டிவிட்டு, அங்கிருந்து தப்பிச் சென்றுவிட்டனர். தலையில் பலத்த காயமடைந்த அருண்குமாரை அக்கம் பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக கடலூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகிறார்கள். இந்த சம்பவம் குறித்து தமிழ்செல்வன் கொடுத்த புகாரின்பேரில் வடலூர் போலீசார் கொலை முயற்சி என வழக்குப்பதிவு செய்து உட்கட்சி பிரச்சினை அல்லது முன்விரோதம் காரணமாக யாரேனும் தமிழ்ச்செல்வனை வெட்டி கொல்ல முயன்றார்களா? என விசாரித்து வருகின்றனர்.

2 வீச்சரிவாள் பறிமுதல்

இதற்கிடையே சம்பவம் நடைபெற்ற இடத்தில் கிடந்த 2 வீச்சரிவாள் மற்றும் ஒரு டி-சர்ட் ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்துள்ளனர். தமிழ்செல்வன் தி.மு.க. நகர செயலாளராக நியமிக்கப்பட்டு ஒரு மாதமே ஆன நிலையில் நடந்துள்ள இச்சம்பவம் வடலூரில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


Next Story