நெல்லை மாநகராட்சி கூட்டத்தில் தி.மு.க. கவுன்சிலர்கள் இடையே காரசார விவாதம்


நெல்லை மாநகராட்சி கூட்டத்தில் தி.மு.க. கவுன்சிலர்கள் இடையே காரசார விவாதம்
x

நெல்லை மாநகராட்சி கூட்டத்தில் தி.மு.க. கவுன்சிலர்கள் இடையே காரசார விவாதம் நடந்தது. ஆவேசமாகவும் பேசியதால் பரபரப்பு ஏற்பட்டது.

திருநெல்வேலி

நெல்லை மாநகராட்சி கூட்டத்தில் தி.மு.க. கவுன்சிலர்கள் இடையே காரசார விவாதம் நடந்தது. ஆவேசமாகவும் பேசியதால் பரபரப்பு ஏற்பட்டது.

மாநகராட்சி கூட்டம்

நெல்லை மாநகராட்சி சாதாரண மற்றும் அவசர கூட்டம் நேற்று நடைபெற்றது. மேயர் பி.எம்.சரவணன் தலைமை தாங்கினார். துணை மேயர் கே.ஆர்.ராஜூ, ஆணையாளர் சிவகிருஷ்ணமூர்த்தி ஆகியோர் முன்னிலை வகித்தனர். காந்தி நினைவு தினத்தையொட்டி 1 நிமிடம் மவுன அஞ்சலி செலுத்தப்பட்டது. கவுன்சிலர் சின்னத்தாய் தமிழ்த்தாய் வாழ்த்து பாடினார்.

கூட்டத்தில் மேயர் சரவணன் பேசியதாவது:-

இந்தியாவே திரும்பி பார்க்கும் வகையில் திராவிட மாடல் ஆட்சியை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் சிறப்பாக நடத்தி வருகிறார். அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படியை உயர்த்தி வழங்கியதற்கு நன்றி தெரிவித்து கொள்கிறோம்.

முதன் முறையாக 5 பிரிவுகளில் மாவட்டம், மண்டல அளவில் 50 வகையான விளையாட்டு போட்டிகள் நடத்த அரசாணை வெளியிட்டு திறம்பட செயல்படுத்திய இளைஞர் நலன், விளையாட்டு மேம்பாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு நன்றியை தெரிவித்து கொள்கிறோம்.

வி.எம்.சத்திரம், மகாராஜ நகர், கே.டி.சி. நகர், பெருமாள்புரம், என்.ஜி.ஓ. காலனி பகுதிகளில் முதற்கட்டமாக 7 நாட்களும் 24 மணிநேரம் குடிநீர் வழங்கும் வகையில் முறப்பநாடு குடிநீர் திட்டம் ரூ.35 கோடியில் செயல்படுத்தப்பட உள்ளது'' என்றார்.

தி.மு.க. கவுன்சிலர்கள் விவாதம்

இந்த கூட்டத்தில் தி.மு.க. கவுன்சிலர்கள் இடையே காரசார விவாதம் நடைபெற்றது.

கவுன்சிலர் ரவீந்திரன் பேசுைகயில், ''மாநகராட்சியில் சம்பந்தமில்லாத நபர்கள் அடிக்கடி வந்து செல்கிறார்கள். இதனால் சட்டம்-ஒழுங்கு பிரச்சினை ஏற்பட வாய்ப்பு உள்ளது'' என்றார்.

5-வது வார்டு கவுன்சிலர் ஜெகநாதன் பேசுகையில், ''கக்கன் நகர் நியூ காலனி அருகில் உள்ள சங்கீதா நகரில் பூங்காவுக்கு ஒதுக்கப்பட்டுள்ள இடத்தில் பூங்கா அமைத்து தர வேண்டும். திம்மராஜபுரம், கக்கன்நகர் பகுதியில் உள்ள பழைய கல் பாலங்கள் வழியாக சாக்கடை கடந்து செல்ல முடியாமல் தேங்கி கிடக்கிறது. எனவே, அந்த பாலங்களை சீரமைக்க வேண்டும்'' என்றார்.

கடைகள் ஒதுக்கீட்டில் குழப்பம்

கிட்டு என்ற ராமகிருஷ்ணன் பேசும்போது, சேரன்மாதேவி ரோட்டை நீண்ட காலத்துக்கு பிறகு சீரமைத்ததற்கு, நன்றி தெரிவித்தார்.

சுப்புலட்சுமி பேசுகையில், ''பாளையங்கோட்டை மார்க்கெட்டில் புதிய கட்டிடம் கட்டுவதால் அங்கு அமைக்கப்பட்டு உள்ள தற்காலிக கடைகள் ஒதுக்கீட்டில் பல்வேறு குழப்பம் நிலவுகிறது. அதனை சரியான முறையில் வியாபாரிகளுக்கு வழங்க வேண்டும்'' என்றார்.

காரசார விவாதம்

நெல்லை மண்டல தலைவர் மகேசுவரி பேசுகையில், மண்டல தலைவருக்கு எந்த அதிகாரமும் இல்லை. எனது மண்டலத்துக்கு உட்பட்ட மேயரின் 14-வது வார்டுக்குள் வரவேண்டாம் என கூறுகிறார்கள் என்று குற்றம் சாட்டி பேசினார்.

அஜய் பேசுகையில், "எனது வார்டில் எந்த பணியுமே நடக்கவில்லை. மண்டல வார்டு குழு கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் எதுவுமே செயல்படுத்தப்படுவதில்லை. எனவே எனது வார்டை பஞ்சாயத்து பகுதியாக மாற்றி விடுங்கள்'' என்றார்.

மாரியப்பன் பேசும்போது, தி.மு.க. சார்பில் கவுன்சிலர்கள் வெற்றி பெற்றது தொடர்பாக கருத்து தெரிவித்தார். இதற்கு ஒருசிலர் எதிர்ப்பு தெரிவித்தனர். இதே போல் தி.மு.க. கவுன்சிலர்கள் காரசார விவாதத்தில் ஈடுபட்டனர். ஒருவருக்கொருவர் ஆவேசமாகவும் பேசிக்கொண்டனர். இதனால் கூட்டத்தில் பரபரப்பு ஏற்பட்டது.

மேயர் அறிவுரை

இதைத்தொடர்ந்து மேயர் பேசும்போது, தி.மு.க. கவுன்சிலர்கள் என்ற எண்ணத்துடன் பேசுங்கள், என்றார். ஆணையாளரும், மன்றத்தில் தங்களது வார்டுக்கு தேவையான கோரிக்கையை முன்வைத்து மட்டும் பேசுங்கள், என்றார். இவ்வாறு விவாதங்கள் நடைபெற்றதால் மாநகராட்சி கூட்டம் பரபரப்பாக காணப்பட்டது. முடிவில் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.


Related Tags :
Next Story