தி.மு.க. எம்.எல்.ஏ.வை கண்டித்து இந்து எழுச்சி முன்னணியினர் ஆர்ப்பாட்டம்
தேனி மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பு இந்து எழுச்சி முன்னணி சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.
தேனி மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பு இந்து எழுச்சி முன்னணி சார்பில் நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது. பெரியகுளம் அருகே கைலாசநாதர் மலைக்கோவிலில் கார்த்திகை தீபம் ஏற்றும் போது அர்ச்சகரை தீபம் ஏற்ற விடாமல் அவருடைய வேட்டியை பிடித்து இழுத்து தடுத்த, பெரியகுளம் தி.மு.க. எம்.எல்.ஏ. சரவணக்குமாரை கண்டித்து இந்த ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டத்துக்கு நகர செயலாளர் முத்துராஜ் தலைமை தாங்கினார். நிர்வாகிகள் பலர் கலந்துகொண்டு சரவணக்குமார் எம்.எல்.ஏ.வை கண்டித்து கோஷங்கள் எழுப்பினர். பின்னர், அவர்கள் மாவட்ட வருவாய் அலுவலர் சுப்பிரமணியனிடம், எம்.எல்.ஏ. மீது துறைவாரியான நடவடிக்கை எடுக்குமாறு ஒரு மனு கொடுத்தனர்.
இதேபோல், இந்து முன்னணி மற்றும் பரிவார் அமைப்புகள் சார்பில் பெரியகுளத்தில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு இந்து முன்னணி நகர தலைவர் சுகுமார் தலைமை தாங்கினார். சிறப்பு அழைப்பாளராக மாவட்ட பொது செயலாளர் முருகன், மாவட்ட செயலாளர் உமையராஜன் ஜி மற்றும் மாவட்ட ஊராட்சி குழு துணை தலைவர் ராஜபாண்டி, பாரதீய ஜனதா கட்சி நிர்வாகிகள் ஆகியோர் கலந்து கொண்டு பேசினர். ஆர்ப்பாட்டத்தில் பெரியகுளம் எம்.எல்.ஏ. சரவணக்குமார் பொது மன்னிப்பு கேட்க வேண்டும், இல்லையென்றால் அவரது அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்துவோம் என்று தெரிவித்தனர். ஆர்ப்பாட்டத்தில் இந்து முன்னணியினர் மற்றும் பாரதீய ஜனதா கட்சி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.