வாரச்சந்தை ஏலத்தை கண்டித்து தி.மு.க. ஆர்ப்பாட்டம்
மட்றப்பள்ளி வாரச்சந்தை ஏலத்தை கண்டித்து தி.மு.க.வினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
கந்திலி ஒன்றியம் மட்றப்பள்ளி வாரச்சந்தை வாரந்தோறும் செவ்வாய்க்கிழமை நடைபெற்று வருகிறது. ஆடு, மாடு உள்ளிட்ட அனைத்து பொருட்களுக்கும் குத்தகை வரி வசூல் செய்து கொள்ள கந்திலி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் ஏலம் நடைபெற்றது. இதனை ஓட்டி பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது. ஏலம் எடுக்க பணம் கட்டியவர் மட்டும் உள்ளே அனுமதிக்கப்பட்டனர். ஏலத்தை வட்டார வளர்ச்சி அலுவலர் நடத்தினார். சத்தியமூர்த்தி என்பவர் ரூ15 லட்சத்து 3 ஆயிரத்திற்கு ஏலம் எடுத்ததாக அறிவிக்கப்பட்டது.
அதைத்தொடர்ந்து இதனை கண்டித்து கந்திலி கிழக்கு ஒன்றிய தி.மு.க. செயலாளர் கே.ஸ்.ஏ.மோகன்ராஜ் தலைமையில் கந்திலி ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்தை ஆர்.தசரதன் தொடங்கி வைத்தார். இதில் கடந்த ஆண்டு மட்றப்பள்ளி வாரச் சந்தை ரூ.25 லட்சத்திற்கு ஏலம் போனதாகவும், இந்த ஆண்டு சிண்டிகேட் அமைத்து ரூ.15 லட்சத்திற்கு ஏலம் கேட்டுள்ளதாகவும், இதனால் அரசுக்கு வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளதாகவும், இது போன்ற செயலில் ஈடுபட்ட நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும், ஏலத்தை ரத்து செய்ய கலெக்டர் நடவடிக்கை எடுக்க வேண்டும், என கோஷங்களை எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். எஸ்.ராஜா, கார்த்தி, சீனிவாசன் உட்பட பலர் உடன் இருந்தனர்.