"இணைந்து கொள்ளையடிப்பதே தி.மு.க.-காங்கிரசின் புதிய கொள்கை" அண்ணாமலை தாக்கு


இணைந்து கொள்ளையடிப்பதே தி.மு.க.-காங்கிரசின் புதிய கொள்கை அண்ணாமலை தாக்கு
x

இணைந்து கொள்ளையடிப்பதே தி.மு.க.-காங்கிரசின் புதிய கொள்கை என பா.ஜனதா மாநில தலைவர் அண்ணாமலை பேசினார்.

திருப்பூர்,

பா.ஜனதா மாநில தலைவர் அண்ணாமலை, என் மண், என் மக்கள் என்ற தலைப்பில் நடைபயணம் மேற்கொண்டு வருகிறார். இந்த நிலையில் அவர் தனது 3-ம் கட்ட நடைபயணத்தை நீலகிரி நாடாளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட அவினாசியில் நேற்று காலை தொடங்கினார். சேவூர் ரோடு சிந்தாமணி தியேட்டர் முன்பு இந்த நடைபயணம் தொடங்கியது. மத்திய ஜவுளித்துறை மந்திரி பியூஸ் கோயல் நடைபயணத்தை தொடங்கி வைத்தார்.

மத்திய தகவல் ஒலிபரப்புத்துறை, மீன்வளம், கால்நடை மற்றும் பால்வளத்துறை இணை மந்திரி எல்.முருகன், எம்.எல்.ஏ.க்கள் வானதி சீனிவாசன் (கோவை தெற்கு), சரஸ்வதி (மொடக்குறிச்சி), பா.ஜனதா மாநில பொதுச்செயலாளர் முருகானந்தம் உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டனர். நடைபயணம் தொடங்கிய சிறிது நேரத்தில் மழை பெய்தது. கொட்டும் மழையில் நனைந்தபடியே நடைபயணம் மேற்கொண்டனர்.

இந்துக்களுக்கு பாதுகாப்பு இல்லை

சேவூர் ரோடு வழியாக அவினாசி பிரதான சாலையில் நடந்து வந்து பின்னர் அவினாசி புதிய பஸ் நிலையம் முன்பு நடைபயணம் நிறைவடைந்தது. அதன்பின்னர் அங்கு பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் அண்ணாமலை பேசியதாவது:-

தாய்மார்களின் இரும்பு கோட்டையாக பா.ஜனதா விளங்கி வருகிறது. பெண்களின் வாக்கு பா.ஜனதா கட்சிக்கு உள்ளது. தி.மு.க. அரசு, இந்து சம்பிரதாயங்களை அழித்துவிட்டு, கோவில் சிலை திருட்டுகளை வேடிக்கை பார்த்துக்கொண்டு இருக்கிறது. முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான ஆட்சியில் இந்துக்களுக்கு பாதுகாப்பு இல்லாத மாநிலமாக தமிழகம் மாறி இருக்கிறது. 2 லட்சம் ஏக்கர் கோவில் நிலங்களை காணவில்லை.

சனாதன தர்மத்தை அழிப்போம் என்று அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் சொன்னால், 2024-ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலில் தி.மு.க. என்ற கட்சியை அழித்து, இருக்கும் இடமில்லாமல் செய்வீர்கள் என்று நம்புகிறோம்.

'அனைவரும் சேர்ந்து நன்றாக கொள்ளையடிக்கலாம் வாங்க' என்பதே காங்கிரஸ்-தி.மு.க.வின் புதிய கொள்கை. ஆனால் பிரதமர் மோடி நேர்மையாக ஆட்சி செய்கிறார்.

400 எம்.பி.க்கள்

உங்களில் ஒருவனாக இருக்கும் கட்சி பா.ஜனதா. 2024-ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலில் பா.ஜனதாவுக்கு தேசிய ஜனநாயக கூட்டணிக்கு ஆதரவு அளித்து மறுபடியும் பிரதமர் மோடி 400 எம்.பி.க்களுடன் ஆட்சி அமைக்க வேண்டும். தமிழகத்தில் இருந்து 39 எம்.பி.க்களை அமர்த்தி அழகுபார்க்க வேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார்.


Next Story