தி.மு.க. கவுன்சிலர் தூக்குப்போட்டு தற்கொலை
இரணியல் அருகே மகள் இறந்த துக்கத்தில் அதே நாளில் தி.மு.க. கவுன்சிலர் தற்கொலை செய்து கொண்டார்.
திங்கள்சந்தை:
இரணியல் அருகே மகள் இறந்த துக்கத்தில் அதே நாளில் தி.மு.க. கவுன்சிலர் தற்கொலை செய்து கொண்டார்.
இந்த சோக சம்பவம் குறித்த விவரம் வருமாறு:-
தி.மு.க. கவுன்சிலர்
இரணியல் அருகே உள்ள தெக்கன்திருவிளை பகுதியை சேர்ந்தவர் பழனிகுமார் (வயது 51). இவர் குருந்தன்கோடு மேற்கு ஒன்றிய தி.மு.க. துணைச் செயலாளராகவும், கக்கோட்டுத்தலை ஊராட்சி 2-வது வார்டு கவுன்சிலராகவும் இருந்து வந்தார்.
இவருக்கு மனைவியும், ஒரு மகனும், ஆஷிகா என்ற மகளும் உண்டு. மகன் 11-ம் வகுப்பு படித்து வருகிறார். இவரது மகள் ஆஷிகா (16) 11-ம் வகுப்பு படித்து வந்தார்.
மகள் சாவு
ஆஷிகா கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் 18-ந்தேதி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். மகள் இறந்ததில் இருந்து பழனிகுமார் மனமுடைந்த நிலையில் காணப்பட்டு வந்தார். அவருக்கு குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் ஆறுதல் கூறி வந்தனர்.
இதற்கிடையே ஆஷிகாவின் நினைவு தினத்தை அனுசரிக்க அதற்கான ஏற்பாடுகளை உறவினர்கள் செய்து வந்தனர். ஆனால் பழனிகுமார் மட்டும் மகள் இறந்த துக்கம் தாங்காமல் மிகுந்த மன வருத்தத்தில் இருந்து வந்ததாக கூறப்படுகிறது.
தூக்கில் தொங்கினார்
இந்த நிலையில் நேற்று காலையில் பழனிகுமார் வீட்டில் தூக்கில் பிணமாக தொங்கினார். இதைக்கண்டு உறவினர்கள் அதிர்ச்சி அடைந்தனர். மகள் இறந்த துக்கம் தாங்காமல் அதே நாளில் பழனிகுமாரும் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது.
பின்னர், இதுகுறித்து அவரது உறவினர்கள் இரணியல் போலீசுக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து பழனிகுமாரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இதுபற்றி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.மகள் இறந்த துக்கத்தில் தி.மு.க. கவுன்சிலர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.