தலைமை ஆசிரியரை கழுத்தை பிடித்து தாக்கிய தி.மு.க. பிரமுகர்..! பள்ளிக்குள் புகுந்து அட்டகாசம்...


தலைமை ஆசிரியரை கழுத்தை பிடித்து தாக்கிய தி.மு.க. பிரமுகர்..! பள்ளிக்குள் புகுந்து அட்டகாசம்...
x

அவிநாசி கைகாட்டிபுதூரில் உள்ள அரசு ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளிக்குள் புகுந்த தி.மு.க. கவுன்சிலரின் கணவர் பள்ளித் தலைமையாசிரியரை தாக்கும் வீடியோ காட்சி சமூக வலை தளங்களில் பரவி வருகிறது.

திருப்பூர்,

திருப்பூர் மாவட்டம் அவிநாசி கைகாட்டி புதூரில் அரசு ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி உள்ளது. இப்பள்ளிக்கு அருகே வசிக்கும் பாஸ்கர் என்பவர் தனது வீட்டின்குப்பையை பள்ளி வளாகத்துக்குள் கொட்டியதாக கூறப்படுகிறது. இதனை தலைமை ஆசிரியர் செந்தாமரைக்கண்ணன் தட்டிக்கேட்டுள்ளார். இதையடுத்துபள்ளி அருகே வளர்ந்திருந்த செடிகளுக்கு மாணவர்களுக்கு தண்ணீர் ஊற்ற சென்றபோது, பாஸ்கர் வீட்டில் இருந்தவர்கள் மாணவர்கள் மீது கழிவுநீரை ஊற்றியுள்ளனர்.

இதை தட்டிக்கேட்ட மாணவர்களை, அவர்கள் தாக்கியதாக கூறப்படுகிறது. இதையறிந்த மாணவர்களின் பெற்றோர் நேற்று பள்ளியில் திரண்டனர். அப்போது, பாஸ்கர் குடும்பத்துக்கு ஆதரவாக அங்கு வந்த அவிநாசி பேரூராட்சி திமுக கவுன்சிலர் ரமணியின் கணவர் துரை, ஆசிரியர்கள் மற்றும் பெற்றோருடன் வாக்குவாதம் செய்தார்.

தலைமை ஆசிரியர் செந்தாமரைக்கண்ணனின் கழுத்தை பிடித்து தள்ளி தாக்கினார். இந்த வீடியோ காட்சி சமூக வலைதளங்களில் பரவி வருகிறது. இந்நிலையில் மாவட்ட குழந்தைகள் நலக்குழும அதிகாரி ரஞ்சிதபிரியா, நேற்று மாலை பள்ளி மாணவர்களிடம் விசாரணையில் ஈடுபட்டார்.

இவ்விவகாரம் தொடர்பாக பள்ளி தலைமை ஆசிரியர் செந்தாமரைக்கண்ணன் செய்தியாளரிடம் கூறும்போது, பாஸ்கரின் குடும்பத்தினர் மாணவர்களை தாக்கிய விவகாரத்தில் பெற்றோரை அழைத்து ஒரு முடிவெடுக்கலாம் என நினைத்திருந்தோம். அதற்குள் கவுன்சிலரின் கணவர் பள்ளிக்குள் புகுந்து என் மீது தாக்குதல் நடத்தினார் என கூறினார்.

பேரூராட்சி கவுன்சிலரின் கணவர் துரை கூறும்போது, 'பள்ளி தலைமை ஆசிரியர் செந்தாமரைக்கண்ணன், ஏற்கெனவே பணியாற்றிய பள்ளியில் மாணவர்களுக்கு பல்வேறு தொந்தரவுகள் அளித்ததால் இங்கு மாற்றலாகி வந்துள்ளார்.

பாஸ்கரின் மகன் மாற்றுத்திறனாளி. அவர்தான் தெரியாமல் பள்ளி வளாகத்துக்குள் குப்பை கொட்டியதாக தெரிகிறது. அந்த மாற்றுத்திறனாளிக்கு செந்தாமரைக்கண்ணன் மன உளைச்சல் ஏற்படுத்தி உள்ளார். இதை தட்டிக்கேட்க சென்றபோது அவர் என்னை அடித்தார். அந்த வீடியோ வரவில்லை. இதுதொடர்பாக அவிநாசி போலீசாரிடம் நான் புகார் அளித்துள்ளேன்'' என்றார்.


Next Story