தி.மு.க. பகுதி நிர்வாகிகள் தேர்தலுக்கான விண்ணப்பங்கள் வினியோகம்
சேலம் மத்திய மாவட்ட தி.மு.க. பகுதி நிர்வாகிகள் தேர்தலுக்கான விண்ணப்பங்கள் வினியோகம் செய்யப்பட்டன.
சேலம் மத்திய மாவட்ட தி.மு.க.வுக்கு உட்பட்ட மாநகர பகுதியில் 13 பகுதிகளுக்கு கட்சி நிர்வாகிகளை தேர்ந்து எடுப்பதற்கான தேர்தலை நடத்த தி.மு.க. தலைமை கழகம் அறிவித்து உள்ளது. இதைத்தொடர்ந்து தேர்தலில் போட்டியிடுபவர்களுக்கான விண்ணப்பம் வழங்கும் நிகழ்ச்சி நேற்று சேலம் புதிய பஸ் நிலையம் அருகில் உள்ள கலைஞர் மாளிகையில் நடந்தது. சேலம் மத்திய மாவட்ட தி.மு.க. செயலாளர் வக்கீல் ராஜேந்திரன் எம்.எல்.ஏ., தேர்தல் அலுவலராக நியமிக்கப்பட்ட சூர்யா வெற்றிக்கொண்டான் ஆகியோர் கலந்து கொண்டு போட்டியிடுபவர்களுக்கு விண்ணப்பங்களை வழங்கினர்.
பகுதி அவைத்தலைவர், செயலாளர், பொருளாளர், துணை செயலாளர்கள், பிரதிநிதிகள் என 11 பதவிகளுக்கான விண்ணப்பங்கள் வழங்கப்பட்டன. இதில் கட்சி நிர்வாகிகள் ஏராளமானவர்கள் ஆர்வமுடன் விண்ணப்பம் பெற்றனர். பின்னர் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை நேற்று மாலையிலேயே தேர்தல் அலுவலர் சூர்யா வெற்றிக்கொண்டானிடம் வழங்கினர். இதில் மாவட்ட பொருளாளர் சுபாஷ், மாநகராட்சி மேயர் ராமச்சந்திரன், துணை செயலாளர்கள் ரகுபதி, திருநாவுக்கரசு, செயற்குழு உறுப்பினர்கள் கார்த்திகேயன், மாநகராட்சி திட்ட பணிக்குழு தலைவர் சாந்தமூர்த்தி, ராஜேந்திரன், பொதுக்குழு உறுப்பினர்கள் குபேந்திரன், மணி உள்பட பலர் கலந்து கொண்டனர்.