தமிழக அரசின் தவறுகளை கவர்னர் சுட்டி காட்டுவது தி.மு.க.விற்கு பிடிக்கவில்லை
தமிழக அரசின் தவறுகளை கவர்னர்சுட்டி காட்டுவது தி.மு.க.விற்கு பிடிக்கவில்லை என்று பா.ஜ.க. சிறுபான்மை பிரிவு தேசிய செயலாளர் கூறினார்.
பா.ஜ.க. சிறுபான்மை பிரிவு தேசிய செயலாளர் வேலூர் இப்ராஹிம் புதுக்கோட்டை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டை சந்தித்து ஒரு புகார் மனு அளித்தார். அதில், கடந்த 15 தினங்களுக்கு முன்பு தனது சமூக வலைதள பக்கத்தில் தன்னையும், பிரதமர் மோடி மற்றும் உள்துறை அமைச்சர் அமித்ஷா ஆகியோரையும் விரைவில் கொலை செய்வோம் என்று அதில் பதிவிடப்பட்டிருந்தது. இதுகுறித்து நடவடிக்கை எடுக்க கோரி புதுக்கோட்டை டவுன் போலீஸ் நிலையத்தில் கடந்த 15 தினங்களுக்கு முன்பு புகார் மனு நானே நேரடியாக சென்று கொடுத்தேன். ஆனால் மனு மீது டவுன் போலீஸ் நிலைய போலீசார் எந்த விதமான நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே உடனடியாக இது தொடர்பாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மனுவில் தெரிவித்திருந்தார். தொடர்ந்து ேவலூர் இப்ராஹிம் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாது:- தி.மு.க.விற்கு எதிராக பா.ஜ.க. பிரமுகர்கள் ஏதாவது பதிவிட்டால் உடனடியாக அவர்களை கைது செய்யும் தமிழக போலீசார், பிரதமர் மோடி, அமித்ஷா மற்றும் தன்னையும் கொலை செய்து விடுவதாக சமூக வலைதளத்தில் பதிவிட்டவர்கள் மீது இதுவரை ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை. கவர்னர் தமிழகத்தின் முதல் குடிமகன். தமிழகத்தின் வளர்ச்சி மற்றும் தமிழகத்தின் முன்னேற்றம் குறித்து அவர் நிச்சயமாக பேசுவார், கருத்து கூறுவார். அனிதாவிற்காக மிகவும் ஆக்ரோஷம் பட்ட மு.க.ஸ்டாலின், விஷ்ணு பிரியாவிற்காக மதுக்கடைகளை மூடுவாரா. தி.மு.க. செய்யும் தவறுகளை கவர்னர் சுட்டிக் காட்டுகிறார். அதனாலேயே முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கவர்னருக்கு எதிராகவும், தி.மு.க நிர்வாகிகள் கவர்னரை கண்டித்தும் பேசி வருகின்றனர். இது கண்டிக்கத்தக்கது. கவர்னர் இந்த மாநிலத்தின் முன்னேற்றத்திற்காகவும் பேசியுள்ளார். கடந்த சில தினங்களுக்கு முன்பு தமிழகம் முன்னேறி கொண்டுள்ளது என்று கூறியுள்ளார். இதற்கு யாரும் தி.மு.க.வினர் எதிர்ப்பு தெரிவிக்கவில்லை. ஆனால் தமிழக அரசு செய்யும் தவறுகளை சுட்டிக்காட்டினால் உடனடியாக கவர்னரை எதிர்க்கின்றனர். இவ்வாறு அவர் கூறினார்.