கடையம் ஒன்றியத்தில் தி.மு.க. நிர்வாகிகள் கூண்டோடு ராஜினாமா
கடையம் ஒன்றியத்தில் தி.மு.க. நிர்வாகிகள் கூண்டோடு ராஜினாமா செய்தனர்.
கடையம்:
கடையம் ஒன்றிய தி.மு.க. செயலாளராக சுமார் 26 ஆண்டுகளாக தொடர்ந்து செயல்பட்டு வந்தவர் குமார். இந்த நிலையில் நடந்து முடிந்த 15-வது உட்கட்சி தேர்தலில், தேர்தலே நடத்தாமல் கடையம் ஒன்றியத்தை வடக்கு, தெற்கு என இரண்டாக பிரித்து வடக்கு ஒன்றியத்துக்கு மகேஷ் மாயவனும், தெற்கு ஒன்றியத்துக்கு ஜெயகுமாரும் செயலாளர்களாக அறிவிக்கப்பட்டனர்.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்தும், கடையம் ஒன்றிய செயலாளராக குமாரை மீண்டும் நியமிக்கக்கோரியும் கடையம் யூனியன் தலைவர் செல்லம்மாள் முருகன், 7 பஞ்சாயத்து தலைவர்கள் உள்பட கட்சி நிர்வாகிகள் 300 பேர் ேநற்று கடையம் சின்னதேர் திடலில் திரண்டனர். பின்னர் அவர்கள் அங்கிருந்து ஊர்வலமாக புறப்பட்டு பஜார் வழியாக வந்து பஸ் நிலையத்தை அடைந்தனர். அங்கு முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதியின் உருவப்படத்தின் முன் தங்களது ராஜினாமா கடிதத்தை வைத்தனர்.