அரசு விழாவுக்கு ரூ.56¾ லட்சம் செலவு செய்ததற்கு தி.மு.க. கவுன்சிலர்கள் 2 பேர் எதிர்ப்பு


அரசு விழாவுக்கு ரூ.56¾ லட்சம் செலவு செய்ததற்கு தி.மு.க. கவுன்சிலர்கள் 2 பேர் எதிர்ப்பு
x

திருச்சியில் நடந்த அரசு விழாவுக்கு ரூ.56¾ லட்சம் செலவு செய்தது குறித்த தீர்மானத்தை மாநகராட்சி கூட்டத்தில் நிறைவேற்றியதற்கு எதிர்ப்பு தெரிவித்து தி.மு.க. கவுன்சிலர்கள் தர்ணாவில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

திருச்சி

திருச்சியில் நடந்த அரசு விழாவுக்கு ரூ.56¾ லட்சம் செலவு செய்தது குறித்த தீர்மானத்தை மாநகராட்சி கூட்டத்தில் நிறைவேற்றியதற்கு எதிர்ப்பு தெரிவித்து தி.மு.க. கவுன்சிலர்கள் தர்ணாவில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

திருச்சி மாநகராட்சி கூட்டம்

திருச்சி மாநகராட்சி சாதாரண கூட்டம் மாமன்ற கூட்ட அரங்கத்தில் நேற்று நடந்தது. கூட்டத்துக்கு மேயர் அன்பழகன் தலைமை தாங்கினார். ஆணையர் வைத்திநாதன், துணை மேயர் திவ்யா ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் கவுன்சிலர்கள் தங்களது வார்டுக்குட்பட்ட பல்வேறு பிரச்சினைகள் குறித்து பேசினார்கள். பின்னர் கூட்டத்தில் 98 தீர்மானங்கள் மாமன்ற ஒப்புதலுக்காக முன்வைக்கப்பட்டது.

அப்போது 43-வது பொருள் மீதான விவாதத்தின் போது, தி.மு.க. கவுன்சிலர்களான முத்துச்செல்வம், ராமதாஸ் ஆகியோர் எதிர்ப்பு தெரிவித்து பேசினார்கள். கடந்த மே மாதம் 14-ந் தேதி தமிழக அரசின் ஈராண்டு சாதனை விளக்க கூட்ட நிகழ்ச்சி மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் அமைச்சர் கே.என்.நேரு தலைமையில் நடந்தது.

அரசு விழாவுக்கான செலவு

இந்த விழாவுக்கு தேவையான தற்காலிக விழா பந்தல், மேடை, முக்கிய பிரமுகர்களுக்கான இருக்கைகள், பயனாளிகளுக்கான இருக்கைகள், அரசு அலுவலர்களுக்கான இருக்கைகள், மேஜை மற்றும் இதர பணிகள் அமைத்து கொடுத்த வகையில் ரூ.56 லட்சத்து 80 ஆயிரம் செலவினத்திற்கான ஒப்புதல் பெறுவதற்காக மாமன்ற கூட்டத்தில் 43-வது தீர்மானமாக கொண்டு வரப்பட்டது. ஆனால் செலவுத்தொகை அதிகமாக இருப்பதாக தெரிகிறது. எனவே இந்த பொருள் குறித்து விவாதம் நடத்தப்பட வேண்டும். அதுவரை தீர்மானத்தை ஒத்தி வைக்க வேண்டும் என்றும், கவுன்சிலர்கள் 2 பேரும் கோரிக்கை விடுத்தனர். அதற்கு மேயர் அன்பழகன் தீர்மானத்தை ஒத்தி வைக்க மறுத்ததோடு, தீர்மானம் நிறைவேற்றப்படும். உங்களது கருத்துக்களை பதிவு செய்யுங்கள் என்று கூறினார். இதையடுத்து கவுன்சிலர்கள் 2 பேரும் இருக்கையில் அமர்ந்தனர்.

கவுன்சிலர்கள் போராட்டம்

பின்னர் கூட்டம் முடிவுற்றபிறகு, கவுன்சிலர்கள் முத்துச்செல்வமும், ராமதாஸும் 43-வது பொருள் குறித்து தீர்மானத்தை நிறைவேற்றியதற்கு எதிர்ப்பு தெரிவித்து மாநகராட்சி கூட்ட அரங்கில் தரையில் அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்டனர். ஆனால் மேயர் கூட்டம் முடிந்துவிட்டதாக கூறி தனது அறைக்கு சென்றுவிட்டார். இதையடுத்து மற்ற கவுன்சிலர்களும் அங்கிருந்து சென்றுவிட்டனர். ஆனால் 2 கவுன்சிலர்கள் மட்டும் தொடர் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர். இவர்களுக்கு ஆதரவாக அ.ம.மு.க. கவுன்சிலர் செந்தில்நாதனும் மாநகராட்சி கூட்ட அரங்கில் இருந்தார்.

விவாதிக்க வேண்டும்

இது குறித்து கவுன்சிலர் செந்தில்நாதன் கூறும்போது, "ஒரு பொருள் மீது கவுன்சிலர்கள் விவாதம் நடத்த வேண்டும் என்று கூறினால் அது குறித்து விவாதம் நடத்துவது தான் சரியானதாக இருக்கும். அதைவிடுத்து தன்னிச்சையாக தீர்மானம் நிறைவேற்றக்கூடாது. அப்படியானால் அனைத்து தீர்மானங்களையும் தானாக நிறைவேற்றிவிட்டால் மாநகராட்சியில் மாமன்ற கூட்டம் நடத்துவதற்கு என்ன அர்த்தம்" என்றார்.

இதனிடையே மாலை 6 மணி அளவில் ஆணையர் வைத்திநாதன், நகர பொறியாளர் சிவபாதம் ஆகியோர் போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். 2 நாட்களில் செலவுதொகைக்கான விளக்கம் அளிப்பதாக கூறியதை தொடர்ந்து அவர்கள் போராட்டத்தை கைவிட்டு சென்றனர். இதில் கவுன்சிலர்கள் முத்துசெல்வம், ராமதாஸ் ஆகியோர் சிவா எம்.பி. வீடு மற்றும் போலீஸ் நிலையத்தில் தாக்குதல் நடத்திய விவகாரம் தொடர்பாக தி.மு.க. கட்சி பொறுப்பில் இருந்து சில நாட்களுக்கு முன்பு தற்காலிகமாக நீக்கப்பட்டார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.


Next Story