தி.மு.க. எம்.எல்.ஏ. வீடு முன்பு திரண்ட தொண்டர்கள்
தி.மு.க. எம்.எல்.ஏ. வீடு முன்பு திரண்ட தொண்டர்கள்
திருப்பூர்
முற்றுகை போராட்ட அறிவிப்பு எதிரொலி காரணமாக திருப்பூரில் தி.மு.க. எம்.எல்.ஏ. செல்வராஜூக்கு ஆதரவாக, அவர் வீட்டுக்கு முன் கட்சி தொண்டர்கள் திரண்டனர். பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்ததால் நேற்று பரபரப்பு ஏற்பட்டது.
எம்.எல்.ஏ. வீட்டுக்கு பாதுகாப்பு
திருப்பூர் வேலம்பாளையம் பள்ளிவாசலுக்கு ஐகோர்ட்டு உத்தரவுப்படி சீல் வைக்க அதிகாரிகள் சென்றதால் கடந்த மாதம் 30-ந் தேதி மாநகரில் பல இடங்களில் மறியல் போராட்டம் நடைபெற்றது. ஐகோர்ட்டு உத்தரவை அமல்படுத்தினால் சட்டம், ஒழுங்கு பிரச்சினை ஏற்படும் என்று தி.மு.க.வை சேர்ந்த திருப்பூர் தெற்கு தொகுதி க.செல்வராஜ் எம்.எல்.ஏ. முதல்-அமைச்சருக்கு கடிதம் அனுப்பி இருந்தார். இந்து முன்னணி அமைப்பை விமர்சித்து அந்த கடிதத்தில் குறிப்பிட்டு இருந்ததாக கூறி, இந்து முன்னணி அமைப்பினர், எம்.எல்.ஏ. வீடு முற்றுகை போராட்டத்தை அறிவித்தனர்.
இதன்காரணமாக கடந்த 2 நாட்களாக திருப்பூர் கொங்கு நகரில் உள்ள எம்.எல்.ஏ. வின் வீட்டுக்கு முன் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது. நேற்று காலை முற்றுகை போராட்டம் நடக்கும் அறிவிக்கப்பட்டு இருந்த நிலையில், க.செல்வராஜ் எம்.எல்.ஏ. வீடு அமைந்துள்ள வீதிகளில் 4 புறமும் இரும்பு தடுப்புகள் அமைத்து போலீசார் பாதுகாப்பு பணியை மேற்கொண்டனர். வாகனங்கள் எதுவும் அந்த வழியாக அனுமதிக்கப்படவில்லை.
தி.மு.க. தொண்டர்கள் திரண்டனர்
வீட்டை சுற்றி 4 புறமும் ரோடுகளில் வாகனங்கள் எதுவும் செல்லவில்லை. அப்பகுதியில் உள்ள கடைகளும் அடைக்கப்பட்டு இருந்தது. போலீசார் தீவிர கண்காணிப்பு பணியை மேற்கொண்டனர். இந்து முன்னணி முற்றுகை போராட்டம் அறிவித்திருந்ததால், தி.மு.க.வினர் எம்.எல்.ஏ. வீட்டுக்கு முன் ஆதரவாக திரள வேண்டும் என்று சமூக வலைதளத்தில் தகவல் பரப்பினர்கள்.
இதைத்தொடர்ந்து தி.மு.க. நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் க.செல்வராஜ் எம்.எல்.ஏ. வீட்டுக்கு முன் காலை முதல் திரண்டனர். நேரம் செல்ல செல்ல தொண்டர்கள் வருகை அதிகமாக இருந்தது. போலீசார் அவர்களை ஒழுங்குபடுத்தினார்கள். இதன்காரணமாக பெரும்பரபரப்பு ஏற்பட்டது. ஆனால் இந்து முன்னணியினர் புதிய பஸ் நிலையம் முன் ஆர்ப்பாட்டம் நடத்தியதால் பதற்றம் தணிந்தது. இருப்பினும் போலீசார் தொடர்ந்து பாதுகாப்பு பணியை மேற்கொண்டனர்.
நினைவு அஞ்சலி
முன்னதாக க.செல்வராஜ் எம்.எல்.ஏ.வின் தாயார் முத்தம்மாளின் முதலாம் ஆண்டு நினைவு அஞ்சலி நிகழ்ச்சி, நேற்று எம்.எல்.ஏ. வீட்டுக்கு முன் நடைபெற்றது. இதில் திருப்பூர் தெற்கு மாநகர பொறுப்பாளர் டி.கே.டி.மு.நாகராஜன், மேயர் தினேஷ்குமார் மற்றும் கட்சியின் முக்கிய நிர்வாகிகள், தோழமை கட்சியினர் பங்கேற்றனர்.